பல்கலைக்கழக அனுமதியும் மாற்று பட்டப்படிப்பு வழிமுறைகளும் (University admission and alternative undergraduate options)

Aslam Saja (B.Sc Eng, M.Sc Eng)
Saja.aslam@gmail.com

2012ம் ஆண்டிற்கான உயர்தர (G.C.E A/L) பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள அதேவேளை, 2011ம் ஆண்டிற்கான Z Score வெட்டுப்புள்ளிகளையும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டில் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 6000 மாணவர்களை உள்ளாக்குவதில் வளப்பற்றாக்குறை ஒரு முக்கியமான பிரச்சினையாக அரசாங்கம் முன்வைத்துள்ள நிலையில், இதற்கு மேலாக உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தும், அரச பல்கலைக்கழகத்தில் (Public University) பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு (University Grant  Commission -UGC ) வெளியிடும் ணு வெட்டுப்புள்ளி அடிப்படையில், அனுமதி பெறமுடியாமல், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காணப்படுகின்றனர். இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பல மாற்று பட்டப்படிப்பு கற்கைகளை தேடுவதில் ஆர்வம் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2006/7ம் ஆண்டில்; உலக வங்கியின்  ஓர் ஆய்வு முடிவின்படி, இலங்கையில் 21%  வீதமான மாணவர்கள் உயர் கல்வித்திட்டத்தில்; (higher education) உள்ளாக்கப்பட்டுள்ள அதே வேளை இதில் 4% மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளிலும் 2.5% தனியார் நிறுவனங்களிலும் 1.5% திறந்த பல்கலைக்கழகத்திலிருந்தும் வெளியாகியுள்ள அதேவேளை 12.2% வெளிவாரி பட்டப்படிப்பு கற்கைநெறிகளில்; உள்வாங்ப்பட்டுள்னர், என கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 15 அரச சார் பல்கலைக்கழகங்கள் (Public) காணப்படுகின்றன. இவற்றில் திறந்த பல்கலைக்கழகம் தவிர்ந்த, ஏனைய 14 பல்கலைக்கழகங்களுக்கும், மற்றும் 4 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (எல்லாம் UGC அனுமதியின் கீழ்வருவன), உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில், பட்டப்படிப்பிற்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். 4 உயர்கல்வி நிறுவனங்களாவன,
(1)    கம்பாஹா விக்கிற மாராச்சி ஆயர்வேத நிலையம்,
(2)    சுதேச வைத்திய நிறுவனம்.
(3)    கொழும்பு பல்கலைக்கழக கணணிக் கல்லூரி
(4)    சுவாமி விபுலான நடன அழகியற் கற்கைகளுக்கான நிறுவனம்.

இலங்கையில் எல்லா பட்டப்படிப்பு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களையும் நோக்குவோமானால் 2010/2011ம் ஆண்டில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் (UGC) மூலமாக மேற்குறிப்பிட்ட 18 அரசசார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இ 46 தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் மற்றும் 10 அரச சார் ஆனால் UGC ன் அனுமதிக்கு வெளியில் பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் எனஇ எல்லாமாக 74 உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் (46 தனியார் + 18 + 10 ) 19, 566 பட்டதாரிகள் வெளியாகியுள்ளனர்.
இவர்களில்,
64% னோர் அரச- UGC நேரடி அனுமதி மூலமும்,
22% னோர் அரச- non- UGC அனுமதி மூலமும்,
14% னோர் தனியார் பல்கலைக்கழகங்களிலுமிருந்து வெளியாகியுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், 2008ம் ஆண்டிலிருந்து தனியார், மற்றும் non-UGC நிறுவனங்களிலிருந்து வெளியான பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையாகும்.
அரச-பல்கலைக்கழகங்கள் தவிர, UGC ன் பல்வேறு கீழ் உயர்கல்வி நிறுவனங்கள்  காணப்படுகின்றன. இவற்றுள் UGC ன் கீழ் (A/L Z வெட்டுப்புள்ளியின் அடிப்படையில்) 4 உயர்கல்வி நிறுவனங்களே மாணவர்களை அனுமதிக்கின்றன. அரச பல்கலைக்கழகங்களிலும் மேற்குறிப்பிட்ட 4 உயர்கல்வி நிறுவனங்களிலும் பட்டப்படிப்பு துறையில் 87 வித்தியாசமான பாடநெறிகள் காணப்படுகின்றன. (2010/2011ம் ஆண்டிற்கான தேர்வில்). 2011/2012ல் மேலதிக 3 புதிய பாடநெறிகள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறியவை தவிர 2011ம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின்படி, இலங்கையில் 46 தனியார் மற்றும் 10 அரச-சார் உயர்கல்வி நிறுவனங்களும் (UGC)ன் அனுமதிக்கு வெளியில் பட்டப்படிப்பு கற்கை நெறிகளை (Undergraduate degree programmes) வழங்குவதாக அண்மையில் LIRNE ASIA நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு கூறுகின்றது.

மாற்று வழிமுறைகள்:-

இலங்கையில் (UGC)ன் மேற்பார்வையின் கீழ் வரும் அரச பல்கலைக்கழகங்கள் (Public Universities) மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அப்பால், பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்கும் 3 வகையான வழிமுறைகள்/நிறுவனங்கள் காணப்படுகின்றன.
(1)    தனியார் பல்கலைக்கழகங்கள்/உயர்கல்வி நிறுவனங்கள் (Private Universities/ Higher Education Institute)
(2)    UGC ன் நேரடி அனுமதி முறையின் கீழ்வராத, அரச சார்/பகுதி அரச சார் பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும். (Private Universities/ Higher Education Institute).
(3)    அரச பல்தலைக்கழதங்களில் காணப்படும் UGC அனுமதிக்கு வெளியில் (non-ugc) காணப்படும் வெளிவாரி கற்கை நெறிகள் (External degrees)

2010/2011ல் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியான 2,733 பட்டப்படிப்பு மாணவர்களில் அதிகமானோர் (1,552 பேர்) கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைசார்ந்தோர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 867 பேர் வர்த்தகத்துறை சார்ந்தோராகும். இது தவிர 4229 பட்டதாரிகள் அரச, non-UGC பட்டதாரிகளாக வெளியேறிவுள்ளனர் இதில் 3000 பேர் தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்படிப்பு துறைகளில் பட்டம் பெற்றோராவர்.

இதே வேளை கணனி மற்றும் IT துறைகளில் 429 பட்டதாரிகள் மாத்திரமே தேசிய அரச(UGC) பல்கலைக்கழகங்களில் வெளியாகியுள்ளனர் (இது. மொத்தமாக 2011ல் வெளியான கணனி/IT துறை பட்டதாரிகளில் 20% மாத்திரமேயாகும்) என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.

மேற்குறிப்பிட்ட 56 தனியார் மற்றும் non-UGC  நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 258 துறைகளிலும், 54 (Specialization) விசேட துறைகளிலும் பட்டப்படிப்பு கற்கைகள் காணப்படுகின்றன. non-UGC அரசசார் உயர்கல்வி நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையாகவோ/பகுதியாகவோ நிதியை பெறுகின்றன. ஆனால் இவ்வுயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதி UGCனால் நெறிப்படுத்தப்படுவதில்லை. இதனால் இவை அரச சார் ஆனால் NON-UGC என குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்ட 10 NON-UGC உயர்கல்வி நிறுவனங்களின் தகவல் பின்வருமாறு:

(1)    சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்.
(2)    தேசிய கல்வி நிறுவனம். (National Institute of Education)
(3)    விவசாய தொழில்நுட்ப மற்றும் கிராமிய நிறுவனம் ((IAT)
(4)    மனிதவள அபிவிருத்தி நிறுவனம். (IHRD)
(5)    தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் – (National Institute of Business Management -NIBM).
(6)    சமுத்திர துறை சார் பல்கலைக்கழகம் (Ocean University)
(7)    University of Vocational Technology (UNIVOTEC)
(8)    தேசிய சமூக அபிவிருத்தி கல்வி நிறுவனம் (National Institute of Social Development -NISD).
(9)    வரைதல் மற்றும் அளவையியல் நிறுவனம் (Institute of Surveying & Mapping-ISM)
(10)     திறந்த பல்கலைக்கழகம் (Open University)

இவற்றில் கொழும்பு பல்கலைக்கழகங்களிற்கு கீழ்வரும் IHRD, IAT கல்வி நிறுவனங்கள், கொழும்பு பல்கலைக்கழக பட்டம் வழங்குகின்றன. NISD, NIBM, ISM ஆகிய நிறுவனங்கள், (UGC)னால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்குகின்றன. இவை தவிர ஏனைய 5 உயர்கல்வி நிறுவனங்களும் பாராளமன்ற சட்டத்தின் கீழ் அவற்றின் பிரத்தியேக பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்குவதற்கு உரித்துடையின.

தனியார் பல்கலைக்கழகங்கள்:-

மேலே குறிப்பிட்டது போன்று, 46 தனியார் நிறுவனங்களில் 2010/2011ம் ஆண்டில் 27 நிறுவனங்கள் பட்டப்படிப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்து பட்டதாரிகளுக்கு பட்டமளித்துள்ளனர். ஏனைய நிறுவனங்களில் கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள போதும், இன்னும் பட்டங்கள் வழங்கப்படவில்லை.

இந் 46 நிறுவனங்களும் 212 கற்கை நெறிகளை நடாத்தி வருகின்றன. இவற்றில் 77 வர்த்தக துறைகான கற்கை நெறிகளும், 63 கணனி/தகவல் தொழில்நுட்பவியல் கற்கை நெறிகளும், 32 பொறியியல் கற்கை நெறிகளுமாகும்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் மிக அதிகமான கனணி/தகவல் தொழில்நுட்பசார் கற்கை நெறிகளை (63) தனியார் நிறுவனங்களே வழங்கிவருகின்றது. (அரச சார் பல்கலைக்கழகங்களில், 40 மாத்திரமே) ஆனால் அரச சார் பல்கலைக்கழகங்களில் வர்த்தகம், பொறியியல், கணனி/தகவல் தொழில்நுட்பம் தவிர்ந்த 300 வகையான மற்ற கற்கைகள் காணப்படுகின்ற அதேவேளை, தனியார் நிறுவனங்களில் இவ்வாறான மற்ற (Other) கற்கை நெறிகள் 40 மாத்திரமே காணப்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

மேலும் 4 தனியார் பல்கலைக்கழகங்கள் மாத்திரமே பல்வேறு கற்கைநெறிகளை வழங்குகின்றன. ஏனைய 42 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், வர்த்தகம், அல்லது கணனி விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒன்றை அல்லது இரண்டு துறைகளை மாத்திரம் கொண்டதாகவே காணப்படுகின்றன.

Aquinas உயர்கல்விக்கான கல்லூரி, Gateway பட்டப்படிப்பு கல்லூரி, கொழும்பு Royal Institute மற்றும் Spectrum விஞ்ஞான தொழிநுட்ப நிறுவனம், ஆகிய நான்குமே பல்வேறு துறையில் பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்கும் தனியார் கற்கை நிறுவனங்களாகும்.

தனியார் பல்கலைக்கழகங்கள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கற்கை நெறிகள் மற்றும் அவை தொடர்பான மேலும் பல தகவல்களை அவற்றிக்கான கட்டணங்கள், அடங்கிய ஆய்வுகள் மேலோட்டமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் கற்கைநெறிகளின் தராதரம் பற்றியும் இன்னும் ஆழமான ஆய்வுகள் இல்லை என்பதும் கவணிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

வெளிவாரி கற்கை நெறிகள்

இலங்கையில் காணப்படும் 14 அரச பல்கலைக்கழகங்களில் 2யைத்தவிர (ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கற்புலன் ஆற்றுகை கலை பல்கலைக்கழகங்கள்) ஏனைய எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கிட்டத்தட்ட 30 வெளிவாரி கற்கை நெறிகள் காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை கலைஇ வணிக முகாமைத்துவம் மற்றும் வர்த்தக துறை கற்கை நெறிகளாகும். இவை தவிர தகவல் தொழில் நுட்பம் மற்றும் விஞ்ஞான துறைகளிலும் கற்கை நெறிகள் காணப்படுகின்றன. அண்ணளவாக   ஆண்டு தோறும் 5000 தொடக்கம் 8000 பேர் பட்டம் பெறுகின்றனர். 2011 ம் ஆண்டில் 6333 பேர் வெளியாகினர். இவர்களில் 70மூமானோர் கலைத்துறை பட்டதாரிகளாவர். 2011ல் வெளியான மொத்த வெளிவாரி பட்டதாரிகளில் 75மூ ஆனோர் (4805) பேர் பெண்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட எல்லா விடயங்களும் கல்வி சார் தகமைகளுடன் தொடர்பான கற்கை நெறிகளாகும்..
(Academic Qualifications). ஆனால் இன்னும் அதிகமான மாணவர்கள் தொழில் சார் தகைமைகள் (Professional Qualifications)  பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல தொழில்சார் கற்கை நெறிகளையும் கற்கிறார்கள். இவை தொடர்பான விடயங்களிலும் மாணவர்கள் சிறந்த தெளிவைப்பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.