நுகர்வு மற்றும் உற்பத்தி வழிமுறைகளை பொறுப்பு வாய்ந்ததாக மாற்றுவோம் – 12
நுகர்வு மற்றும் உற்பத்தி (Consumption and production) விடயங்கள் பல்வேறு சமூக பொருளாதார விடயங்களில் தாக்கம் செலுத்துகின்றன. நீர், உணவு, கட்டட சூழல், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா தொழில் மற்றும் கழிவு முகாமைத்துவம் என பல துறைகளில் உற்பத்தியும் நுகர்வும் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட்டால், பல்வேறு சமூக சூழல் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் ஒரு இலக்காக நிலையான பொறுப்புமிக்க உற்பத்தியும் பாவனையும் (Sustainable consumption and production) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இயற்கை வளங்களின் பாவனை தொடர்பில் நிலையான முகாமைத்துவம் மற்றும் செயற்திறன் தொடர்பிலான அணுகல் மிக முக்கியமாகும். உணவு விரயமானது நுகர்வோர் மட்டங்களிலும் உற்பத்தியின் போதும் மற்றும் விநியோகிக்கும் சங்கிலியின் மூலமும் உணவின் இழப்பைக் குறைத்தல் மற்றும் அறுவடைக்குப் பிந்திய இழப்புக்களும் குறைக்கப்படல் வேண்டும். எமது உற்பத்தியில் குறிப்பாக விவசாயம் (மரக்கரி மற்றும் பழங்கள்) மற்றும் மீன்பிடி போன்ற துறைகளில் 40 வீதம், அவை நுகர்வோரை பாதுகாப்பாக சென்றடைவதற்கிடையில் விரயமாக்கப்படுகின்றன.
இரசாயனச் சுற்றுச்#ழல் முகாமைத்துவம் மற்றும் அனைத்து கழிவுகளும் சர்வதேச தேசிய நியமங்கள், கட்டமைப்புக்களுக்கு அமைவாகவும் முகாமை செய்யப்படல் வேண்டும். உடலுக்கு தீங்கு விழைவிக்கக்கூடிய அனைத்து கழிவுகளும் குறிப்பாக இரசாயண கழிவுகள், நீர் மற்றும் மண்ணில் கலப்பதனையும் அதன் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்#ழலுக்கான பாதகமான விளைவுகள் ஏற்படுவதைக் குறைத்தல் வேண்டும். கணிசமானளவு கழிவுகள் உற்பத்தியாவதை தடுத்தல்¸ குறைத்தல்¸ மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு மூலமாக குறைக்கக்கூடிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். மேல் மாகாணத்தில் கழிவுகளை மீழ்சுழற்சிக்கு உட்படுத்தும் வேலைத்திட்டங்களில் 17 வீதத்தை 40 வீதமாக மாற்றும் திட்டங்கள் பிரேரிக்கப்பட்ட போதிலும் அவை செயற்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.
நிறுவனங்களில் குறிப்பாக மிகப்பெரிய நிறுவனங்களில், நிலைபேறான நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுவதுடன், ஒருங்கிணைந்த நிலைபேறான தகவல்களை அவர்களின் அறிக்கையில் பிரசுரிக்க வேண்டும். அதேபோல் தேசிய மாகாண மட்டங்களிலும் குறிப்பாக உள்ளுராட்சி சபைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திறன் ஆகியவற்றை வலுப்படுத்தி அதன் மூலம் மேலும் நிலைபேறான முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை முன்னோக்கி நகர்த்துவதற்குரிய வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமாகும். இலங்கையை பொருத்தவரையில் சுற்றுலாத்துறை தொடர்பில் நிலைபேறான செயற்திட்டங;களின் மூலம் தொழில்வாய்ப்புக்களும் மற்றும் உள்நாட்டு, கலாச்சாரம் மற்றும் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடிகிறது.
இலங்கையைப் பொருத்தவரையில் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஒரு நுகர்வுச்சமூகமாக (consumerism/consumer society) காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தின் கொள்வனவுச்சக்தி (purchasing power) அதிகம் என்பது பொதுவாக அறியப்பட்ட விடயம். எனவே எமது நுகர்வு வழிமுறைகளை பொறுப்புள்ளதாக மாற்றிக்கொள்வது மிக அவசியம். அவசியமற்ற, பொருத்தமற்ற, சூழலிற்கு பாதிப்பு விளைவிக்கக்கூடிய பொருட்களை வாங்குவதிலிருந்தும், உற்பத்தி செய்வதிலிருந்தும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். இது மிக அடிப்படைய மார்க்க கடமையும் கூட. இதில் மிக முக்கியமாக எமது உள்ளுராட்சி சபைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சூழலை மாசுபடுத்தக்கூடிய, சுகாதாரத்திற்கு கேடான, சமூகப்பிரச்சினைகளை தோற்றுவிக்கக்கூடிய, பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கும்,, விற்பனை செய்வர்களுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக அமுல்நடத்தப்பட வேண்டும். ஏனைய சமூகங்களுக்கு நாம் முன்மாதிரியாக நடக்கக்கூடிய ஒரு மிக முக்கிய பகுதியாக இந்த நுகர்வு மற்றும் உற்பத்தி துறை காணப்படுகிறது. சூழலை மாசுபடுத்துவதையும் வீண்விரயங்களை தவிர்ப்பதையும் ஒரு மிகப்பெரிய சமூக, மார்க்க கடமையாக கொண்டுள்ள ஒரு சமூகம், இவ்விடயங்களில் இனிமேலும் பராமுகமாக இருக்க முடியாது.
குறிப்பாக உற்பத்தி தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், பொறுப்பு வாய்ந்த நிலையான உற்பத்தி மற்றும் விற்பனை உபாயங்களை கடைப்பிடிக்க வேண்டும். உற்பத்தி பொருட்கள் சூழலிற்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கா வண்ணம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில், சூழல் பாதிப்பில்லாத தொழில்நுட்பங்களை உபயோகிக்க முன்வரவேண்டும். தமது உற்பத்திக்கு போட்டியாக இருப்பவர்கள் முறைகேடான முறைகளில் உற்பத்தி செய்து அதிக இலாபமீட்டுகிறார்கள் என்பதற்காக நாமும் அவ்வாறு செய்தால் தான் சந்தையில் எமது பொருட்களை தக்க வைக்க முடியும் என்ற பிழையான ஒரு வழிமுறையும், எண்ணப்பாடும் எம் சமூகத்தில் பலரிடம் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான பிழையான எண்ணங்களும் வாதங்களும் எம்மை ஒருபோதும் வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லாது. எமது உற்பத்தி பொருட்களை சூழலிற்கு பாதுகாப்பானதாக மாற்றி அவற்றை சரியான பொறுப்புவாய்ந்த விற்பனை வழிமுறை மற்றும் விளம்பரங்களின் மூலம் மக்களின் மனதையும் அபிமானத்தையும் சமூக மற்றும் சூழல் பொறுப்புணர்வையும் கட்டியெழுப்ப முடியும். எதையும் நாம் வித்தியாசமாக புத்தாக்கமாக சமூகத்திற்கும் நாம் வாழும் சூழலிற்கும் தீங்கிழைக்கா வண்ணம் செய்யும் போது அவற்றிற்கு ஆதரவுத்தளம் அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறைவடையப்போவதில்லை. குறுகிய காலத்தில் அதிக இலாபமடைய வேண்டுமென குறுக்கு வழிகளில் எமது உற்பத்தி வியாபார நடைமுறைகளை எண்ணும்போதே அவை தோல்விக்கான அடையாளம் என்பதை நாம் உணரவேண்டும். இதுவே கடந்த கால அனுபவங்களும் வரலாறும்.
நீர், மின்சாரம், இயற்கை வளங்களை வீண்விரயம் செய்தல் என்பன பாரிய சமூக குற்றங்களாகும். ஓடும் ஆற்று நீரானாலும் அதை தேவையானளவு சிக்கனமாக பாவிக்கவே இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. மிக அரிதாகிக் கொண்டு செல்லும் இயற்கை வளங்களை மிகவும் பொறுப்புணர்வுடன் இயலுமானளவு மீள்சுழற்சிக்கு உற்படுத்தி பாவிக்க வேண்டும். பல நாடுகள் மீள்சுழற்சிப் பொருளாதாரத்தை (circular economy) தற்போது ஊக்குவித்து வருகின்றன. உற்பத்தியிலிருந்து பாவனை, பாவனையிலிருந்து மீள்சுழற்சி, மீள்சுழற்சியிலிருந்து உற்பத்தி, மீண்டும் உற்பத்தியிலிருந்து பாவனை, மூலம் பெருமளவான கழிவு தவிர்க்ப்பட்டு, வினைத்திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் பல்வேறு கட்டங்களில் பொருளாதார பயன் கிடைக்கிறது. சூழல் மாசடைதல் தவிர்க்கப்படுகிறது. புத்தாக்கத்துடனான மீள்சுழற்சி தொழில்நுட்பங்களுக்கான கேள்வி தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இவற்றை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தொழில் வல்லுணர்களுக்கும், சமூக அரசியல் தலைமைகளுக்கும் உண்டு. இவ்விடயங்களில் தவறுவோமானால் சூழலை நேசிக்காத, சூழலிற்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும், நுகர்வு சமூகம் என்ற குற்றச்சாட்டிலிருந்து நாம் மீள்வது கடினம்.
இவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட வேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள், கல்வி நிலையங்களில் இளைஞர்கள், மற்றும் வர்த்தக சங்கங்கள், துறை சார் நிபுணர்கள், ஆய்வாளர்களை கொண்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு தமது நகரங்களை, நிறுவனங்களை, வர்த்தக நிலையங்களை, தொழில்சாலைகளை பொறுப்புவாய்ந்த சமூக, சுகாதார, சூழல் தீங்கற்ற, உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் இடங்களாக மாற்ற முன்வர வேண்டும்.