தரமான கல்விநிலையே சமூக முன்னேற்றத்திற்கான ஆணிவேர் – 04
ஒரு மனிதன் தனது வாழ்நாள் பூராகவும் கற்கக்கூடியவனாக இருக்கிறான் (Lifelong learner). அது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி முறையினூடகவோ (formal education) அல்லது தனது சொந்த வாழ்நாளில் பெறும் படிப்பினைகளாகவும் (informal education) இருக்க முடியும். நாட்டின் எல்லா பிரஜைகளும் குறிப்பாக இளைஞர் யுவதிகள் அனைவரும் கல்வியறிவு (literacy) மற்றும் எண்ணறிவு (Numeracy) பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்ற மிக அடிப்படை இலக்கை அடைவது கல்வியின் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும். பொதுவாக ஒவ்வொரு மனிதனினதும் வயது வீச்சிற்கேற்ப சிறுவயதிலிருந்து வயோதிபம் வரை தொடர்;ச்சியான கல்விக்கான வாய்ப்பும் கற்றல் கலாச்சாரமும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக இலங்கையில் ஆரம்ப குழந்தைப்பருவ கல்வி – childhood education (பாடசாலைக்கு முன்), முதல்நிலை கல்வி – primary education, இரண்டாம் நிலைக்கல்வி – secondary education, மூன்றாம் நிலைக்கல்வி (பாடசாலையின் பின்) – tertiary education including technical/vocational and university education, தொழில் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி – job/skill oriented education என பல்வேறு பிரிவுகளில் திட்டமிடப்படுகின்றன.
ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் நான்காவது இலக்காக தரமான கல்வி (Quality education) காணப்படுகிறது. அனைவரும் உள்ளடங்கிய சமத்துவமான கல்வியையும் வாழ்நாளுக்கான கற்றல் சந்தர்ப்பத்தினையும் உறுதி செய்வதே இதன் இலக்காகும். இவ்விலக்கை அடைய பல்வேறு முயற்சிகள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் முதன்மையாக;
- அனைவருக்கும் தரமான ஆரம்பக் கட்ட குழந்தைப் பருவத்தின் அபிவிருத்தி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதுடன்¸ அவர்களுக்கான ஆரம்பக் கல்விக்கு அவர்களை தயார்ப்படுத்துதல் வேண்டும்.
- அனைவருக்கும் சமமாகவும் மற்றும் தரமானதுமான முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை கல்வி பயனுள்ள கற்றல் விளைவுகளுக்கு இட்டுச் செல்வதை உறுதிப்படுத்தல்.
- அனைவருக்கும் தரமான மூன்றாம் நிலைக் கல்வியை – அதாவது தொழில்நுட்ப ¸மற்றும் தொழில் சார் கல்வியை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தலும், பல்கலைக்கழகம் அடங்கலான சமமான பிரவேசத்தினை உறுதிப்படுத்தல் வேண்டும்.
- பொருத்தமான திறமைகளின் அடிப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் திறன்களும் அடங்கலாக தொழில்வாய்ப்பு¸ மற்றும் தொழில் முனைவோர் தொடர்பில் பயிற்சிபெற்ற இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும்
- கல்வி தொடர்பிலான பால்நிலை வேற்றுமைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள்¸அங்கவீனமானவர்கள்¸ மற்றும் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளிலுள்ள பிள்ளைகளும் அடங்கலாக அனைத்து மட்டத்திலுமுள்ளவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சியின் பிரவேசத்தினை அடிப்படையாகக் கொண்ட சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும்
- சமாதானம் மற்றும் வன்முறையற்ற கலாச்சாரத்தினை ஊக்குவித்தல்¸மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையினை போற்றுதல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு கலாச்சாரத்தின் பங்களிப்பு ஆகியவற்றை உறுதிசெய்தல் அவசியமாகும்.
இலங்கையின் தற்போதைய கல்வி தொடர்பான சில விடயங்களையும் அடிப்படை தரவுகளையும் நோக்குவோம். ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக்கல்வியை 85% ஆன மாணவர்கள் பூர்த்தி செய்கிறார்கள். இலங்கையின் இலவச கல்விக்கொள்கை ஆகக்குறைந்தது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக்கல்வியை அனைவரும் பெற்றுக்கொள்ளவதை உறுதிசெய்கிறது. அவ்வாறு இருந்தும் பாடசாலை இடைவிலகல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அது தவிர 15-20% ஆன இளைஞர்களே தேசிய பல்கலைக்கழங்களுக்கும் மூன்றாம் நிலை அரச தொழில்கல்வி நிறுவனங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டு மூன்றாம் நிலைக்கல்வியை பூர்த்தி செய்கிறார்கள். மூன்றாம் நிலை அரச கல்வி நிறுவனங்களின் வளப்பற்றாக்குறையே மிகக் குறைந்தளவு இளைஞர்களை உள்வாங்க மிகப்பிரதானமான காரணமாகும்
ஒரு மாணவனின் பாடசாலை இடைவிலகல் மூன்று சந்தர்ப்பங்களில் இடம்பெற வாய்ப்புள்ளது. அதாவது சாதாரணதர பரீட்சையின் முன் அல்லது பின் அல்லது உயர்தரப்பரீட்சை எழுதாமலும் நடைபெறமுடியும். ஆகக்குறைந்தது கா.பொ.த சாதாரணதரம் வரை மாணவர்களை இடைவிலகாமல் நல்ல பெறுபேற்றை பெற வைப்பதை இலக்காக கொள்ளவேண்டும்.. கா.பொ.த. சா/த த்தின் பின்னே அதாவது உயர்தரத்திலேயே போட்டிப்பரிட்சையாக மாறுகிறது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுப்பது சாத்தியமாகும். சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தரம் கற்காமல் விட்டாலும் சாதாரண தர பெறுபேற்றைக்கொண்டு வேறு கற்கைகளை பூர்த்திசெய்து தொழில்வாய்ப்பை அதிகரிக்க முடியும். ஆனால் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெறும் மாணவன் உயர்தரத்தை தொடர்வதற்கான உந்துதலை வழங்குகிறது
பொதுவாக இலவச பாடப்புத்தகங்கள் சீருடை குறைந்த போக்குவரத்து கட்டணம் புலமைப்பரிசில் நிதி என கல்வியைப்பெறுவதில் ஏழை மாணவர்களையும் கவனத்தில் கொண்டு அரசு பல திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இலங்கயில் மூன்றாம் நிலைக்கல்வி முறை மிகப்பாரிய வளப்பற்றாக்குறையுடன் வினைத்திறனற்றிருக்கும் அதேவேளை இலங்கையின் முதலாம் இரண்டாம் கல்வியியல் முறைமை பல வரப்பிரதாசங்கள் பெற்றும் தற்காலத்திற்கு பொருத்தமான அறிவுரீதியான சமூகங்களையோ நாட்டையோ கட்டி எழுப்பமுடியாமலுள்ளது. தற்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பண்பாடுகளுடன் கூடிய ஒழுக்க ரீதியான (value based) கல்விக்கொள்கை, நவீன தொழில்நுட்பங்களை மையப்படுத்திய புத்தாக்க சிந்தனையுடனான தொழில் சந்தையை மையப்படுத்திய உள்ளடக்கம், நீதியான ஊழலற்ற இன ரீதியான பாகுபாடுகளற்ற நிர்வாக சீரழிவுகளற்ற அரசியல் தலையீடுகளற்ற கல்வி நிர்வாக சேவை மற்றும் பாடசாலைகள் இல்லாத ஒரு சூழலில், ஒழுக்கம் நிறைந்த மாணவர்களையும் இளைஞர்களையும் உருவாக்குவதில் பல பின்னடைவுகளை கண்கூடாகக்கண்டிருக்கிறோம்.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கால திட்டங்களில் தனது இன, சமூக ரீதியான கல்வி மேன்பாட்டு கோட்பாடுகளுக்குள் மாத்திரம் வரையரை செய்யாமல், எவ்வாறு நாட்டின் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்தி இலக்கை நோக்கிய கல்வியின் பங்களிப்பை அமுல்படுத்த முடியும் என சிந்திக்கவேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான காலகட்டதை அடைந்திருக்கிறோம். பரீட்சைகளை மையமாக வைத்த கல்விக்கு அப்பால், சிறந்த அறிவுசார் சமூகமாக நாம் மாறவேண்டும். ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் தனக்குரிய தனித்துவன ஒரிரு துறைகளை ஆழமாக அறிந்திருப்பதும் ஏனைய விடயங்களில் பரந்த அறிவைப்பெற்றிருப்பதும் நாட்டிற்கும் சமூகங்களுக்கும் சேவைசெய்யக்கூடிய சிறந்த பிரஜையாக வாழவும் நாட்டிற்கான காத்திரமான பங்களிப்பையும் செய்ய முடியும். ஆழமான வாசிப்புக்கலாச்சாரத்தையும் பிரயோசனமிக்க அறிவைத்தேடும் நபர்களாக நம்மை மாற்றிக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் முன்னுரிமை வழங்குவதோடு மற்றவர்களையும் அதன்பால் தூண்டுவதும் எமது கடமையாகும்