
சமாதான சூழலும் சமூக நீதியும் – 16
நிலையான அபிவிருத்தி இலக்குகளில், பௌதீக, பொருளாதார அபிவிருத்தி, சூழல் மற்றும் கலாச்சாரங்களின் பாதுகாப்பிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் சமூகத்தில் சமாதானமான சூழல், சமூக நீதி, வினைத்திறனான சமூக செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் மிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். எனவே தான் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் சமாதானமான மற்றும் உள்ளடக்கமான (peaceful and inclusive) சமூகங்களை ஊக்குவித்தல்¸ அனைவருக்கும் நீதியினை அணுகும் வசதியினை வழங்கல்¸ அனைத்து மட்டங்களிலும் வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகத்தன்மை கொண்ட உள்ளடக்கமான நிறுவனங்களை கட்டியெழுப்பல் (strong institutions) என்பன உள்ளடங்கியுள்ளன.
தற்கால இலங்கை சூழலில், இவை தொடர்பான செயற்பாடுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இனங்கள், மதங்கள், பிரதேசங்கள் என பிரிவினைகள் கூர்வடைந்து செல்லும் இக்காலத்தில், தாம் வாழும் முரண்பாட்டுச் சூழல் தமது எதிர்கால அபிவிருத்தி இலக்குகளில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சமாதான சூழல், நீதியை நிலைநாட்டல் என்ற இலக்கின் அடிப்படை, அனைத்து விதமான வன்முறைகளையும் நிறுத்தி, அதன் மூலம் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களிலிருந்து விடுபடல் மிக அவசியமாகும். இவற்றில் குறிப்பாக:
– அனைவருக்கும் சமமான நீதி என்ற விதிமுறையை உறுதிப்படுத்தக்கூடிய சட்ட ஆட்சியினை மேம்படுத்தல்,
– சட்டவிரோத நிதி, மற்றும் ஆயுதப்பரிமாற்றம் ஆகியவற்றை நிறுத்தல், மற்றும் அனைத்து விதமான திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒழித்தல்,,
– அனைத்து மட்டத்திலுமான ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான செயற்பாடுகளை இல்லாதொழித்தல் – சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகம்¸ மற்றும் அனைத்து விதமான வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருதல், என மிக நீண்ட பட்டியலை இட்டுச்செல்ல முடியும்.
இவற்றை அடைவதற்கான மிகப் பெரிய சவால் வினைத்திறனான¸ பொறுப்பான மற்றும் வெளிப்படையான நிறுவனங்கள் அனைத்து மட்டங்களிலும் உருவாக்குவதாகும். அனைத்து மட்டங்களிலும் பதிலளிக்கக்கூடிய¸அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பங்குபற்றக்கூடிய தன்மை கொண்ட முடிவுகள் எடுக்கப்படக்கூடிய உபாயமொன்றை இந்நிறுவனங்கள் உறுதி செய்வதன் மூலமே சமூகத்தில் நிலையான மாற்றங்களை கொண்டு வர முடியும். தேசிய சட்டத்திற்கும்¸ சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் அமைய பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தல் (right to information) மற்றும் பாதுகாப்பான அடிப்படைச் சுதந்திரங்கள் (fundamental freedoms) இருப்பதை உறுதிசெய்வதும் நாம் எதிர்பார்க்கும் சமாதான சூழலையும் நீதியையும் நிலைநாட்ட உதவும்.
அண்மையில் ஆபிரிக்க நாடுகளில் செய்யப்பட்ட மதிப்பீட்டில், தமக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ள நான்கில் ஒருவர் இலஞ்ஞம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் நிலையைப்பற்றி கூற அவசியமேயில்லை. மேல் அதிகாரிகளிலிருந்து அடிமட்ட ஊழியன் வரை இலஞ்ஞத்திற்கான பொறிமுறை திறன்பட அமையப்பெற்றிருக்கிறது. உலகின் ஊழல் தொடர்பான 175 நாடுகளின் தர வரிசையில் இலங்கை 89வது இடத்தில் உள்ளது. ஊழல்கள் குறைந்த நாடாக, முதலாவது இடத்தில் டென்மார்க்கும், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும் உள்ளன. இலஞ்ஞம் ஊழல் தொடர்பான விடயங்களில் மிகப்பாரிய மோசடிகள் கிடப்பில் போடப்பட்டு, அதிகாரமற்ற பொதுமகன் விடும் சிறு தவறுகளை பூதாகரமாக்கி, அல்லது குற்றமற்றவர்களை இன மத வெறுப்புக்களை தூண்டி, மிகப்பாரிய மோசடிகளை செய்த அரசியல் மற்றும் அரச அதிகாரமிக்கவர்களை காப்பாற்றப்படும் நிலமையே இந்நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.
கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், தொழில் வாய்ப்புக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, குறிப்பாக இளைஞர்களை வழிநடத்த அரசும் சமூகத்தலைமைகளும் சரியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனவா என்பது கேள்விக்குறியே. அவ்வாறான சரியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன மத வெறுப்பின் பால் இளைஞர்கள் தூண்டப்படுவதை குறைத்திருக்க முடியும். இன, மத, கலாச்சார பல்வகைத்தன்மையை (pluralism) சமாதான மற்றும் நீதியான சமூக சூழலை ஏற்படுத்தக்கூடிய மிகச்சிறந்த மூலதனமாக பயன்படுத்த, அரசும் சமூகத்தலைமைகளும் தவறியதன் எதிர் மறையான விளைவை நாள்தோறும் நாம் அனுபவித்து வருகிறோம்.
பல கோடிகள் செலவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக, சமய நல்லிணக்க செயற்பாடுகள் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. இன்று சமூக, சமய நல்லிணக்கம் பேசுபவர்கள் நாளை அவற்றை இல்லாமலாக்கக்கூடிய செயற்பாட்டாளராக மாறுவதையே எம்மால் அவதானிக்க முடிகிறது. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பொது தளத்தில் இயங்க வேண்டிய விடயங்கள் என்ன, தமது தனித்துவத்திற்கான செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பான உள்ளக கலந்துரையாடல்கள் வினைத்திறனான கொள்கை மற்றும் செயல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே.
ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின் குறிப்பாக சிறுபான்மை சமூகங்களுக்கு மத்தியில் சமாதான மற்றும் நீதியான சமூக சூழலிற்கு (peaceful and just society) பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை இச்சூழலிருந்து விடுபட ஒரு புதிய அரசியல், சமூக, கலாச்சார பாதையை தேர்ந்தெடுப்பதை தவிர மாற்று வழிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை. இம்மாற்றத்திற்கான மனோபாவம் இன மத வேறுபாடுகளுக்கப்பால், பொதுமக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் ஏற்பட நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

