சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் ஊடக மாநாடு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கடந்த 2019.05.19ம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் செயலாளர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் போஷகர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், உப தலைவர்களான சங்கரத்ன தேரர், மௌலவி இசட்.எம்.நதீர், போதகர் ஏ.கிருபைராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமய, சமூகங்கள் சார்பில் கருத்துரையாற்றினர்.

இதன்போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் வட மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சமய, சமூகப் பிரமுகர்களினால் வன்மையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து இன மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வொழுங்கு விழுமியங்கள் தொடர்பிலும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

அமைப்பின் பொருளாளரும் ஊடகப் பேச்சாளருமான பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா மேற்படி சம்பவங்கள் தொடர்பில் அமைப்பின் கண்டனப் பிரகடனத்தை வெளியிட்டார்.

அத்துடன் பயங்கரவாத சம்பவங்களினால் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

@
Aslam S.Moulana