நிலைபேறான சமூகத்தை நோக்கி – வாராந்த பத்தி தொடர் – 02 பட்டினியற்ற வாழ்வு

பட்டினியற்ற வாழ்வு வறுமையற்ற வாழ்வைப்போன்று மற்றுமொரு இறையருள். வறுமைக்கும் பட்டினிக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொடிய வறுமை பட்டினிக்கு இட்டுச்செல்லும்.

ஒரு சமூகத்தில் பரம ஏழையாக வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடியவர்கள் இல்லாமலில்லை. ஒரு நிரந்தர மாத வருமானத்தை இக்காலத்தில் பெறாத, நாள் வருமானத்தில் மாத்திரம் தங்கியிருக்கும் எத்தனையோ நபர்களையும் குடும்பங்களையும் சில சமூகக் குழுக்களையும் காண்கிறோம். ஒரு பஞ்ஞ காலம் வரும்போது – உதாரணமாக வரட்சியினால் பயிர்கள் வாடி இறந்து விவாசியிகளின் வருமானம் இல்லாமலாகும் போது, தனது அடிப்படைத்தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் இக்காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றன. ஒரு புறம் வரட்சி மறுபுறம் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் விவசாயத்தில் மாத்திரம் தங்கி வாழும் மனிதர்களை குடும்பங்களை சமூகத்தை மிகக் கடுமையாக பாதிக்கின்றன. இதே போல் ஒரு நாட்டில் ஒரு பிரதேசத்தில் ஏற்படும் அமைதியின்மை சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பல குடும்பங்களின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றன. 2009ம் ஆண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து காலையுணவில்லாமல் எத்தனையோ மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

சில கிராமங்களில் தமது வறுமையால் சில வேளை உணவுகளை தவிர்த்துகொள்ளும் குடும்பங்களை காண்கிறோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் போசாக்கான உணவு சுத்தமான குடிநீர் சுகாதாரமான முறையிலான வாழும் வீட்டுச்சு+ழல் போன்ற அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. அதிகமான சந்தர்ப்பங்களில் தமது பசியையே போக்க கஸ்டப்படும் குடும்பத்தலைவர்கள் எவ்வாறு தமது பிள்ளைகளுடைய போசாக்கான உணவுத்தேவையை நிவர்த்திசெய்ய முடியும்.

இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஜனநாயகம் மனித உரிமைப் போராட்டங்கள் வானுயர்ந்து காணப்படும் இக்காலத்திலும்  உலகின் பல்வேறு நாடுகளில் இலட்சக்கணக்கில் பட்டினியால் இறக்கும் மனிதர்களையும் கோடிக்கணக்கில் போசாக்கின்மையால் அல்லலுறும் சிறார்களையும் காண்கிறோம். சில சமூகங்களில் செல்வத்தை வீணடிக்கும் பெரும் பணக்காரர்கள் ஒரு புறம் மண்ணைத்தவிர வேறு எதையும் உண்ணமுடியாத வறுமையில் புரளும் ஏழைகளும் அநாதைகளும் மறுபுறம் என்ற ஒரு சமநிலையற்ற சமூக நிலையையும் அநீதியையும் நாம் காணமுடியும். இந்நிலையில்தான் நிலையான சமூக அபிவிருத்தி இலக்குகளில் வறுமை ஒழிப்பிற்கு அடுத்த இலக்காக பட்டினியை இல்லாதொழித்தல் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டின் உலக பட்டினி சுட்டெண் தொடர்பான 119 நாடுகளின் வரிசையில் இலங்கை 67ம் இடத்தை பெறுகிறது. 119வது இடத்தில் அதிக பட்டினி நிலையுள்ள நாடாக மத்திய ஆபிரிக்க குடியரசு விளங்குகிறது.பட்டினி நிலையை அளவிடும் மூன்று காரணிகள் காணப்படுகின்றன. (1) சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளடங்கலாக மொத்த சனத்தொகையும் போதியளவான உணவை பெற்றுக்கொள்ளாமை (2) ஐந்து வயதிலும் குறைந்த சிறுவர்களின் போசாக்கற்ற தன்மை மற்றும் (3) ஐந்து வயதிற்குட்பட்ட சிரார்களின் மரண வீதம். இக்குறிகாட்டிகளைக்கொண்டு ஒரு நாட்டின் பட்டினி நிலை தீர்மானிக்கப்படுகிறது.

இலங்கை ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களின் போசாக்கு நிலையை உயர்த்துவதில் இன்னமும் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. கிராமப்புறங்களில் அல்லது வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் இவ்வாறான போசாக்கு குறைநிலை அதிகமாக காணப்பட்டாலும் நகர்ப்புறங்களிலும் வறுமை நிலையற்ற குடும்பங்களிலும் கூட குறிப்பிடத்தக்களவு அதிகமாக காணப்படுகின்றது என ஆய்வுகள் காட்டுகின்றன. சில வேளைகளில் கிராமங்களில் அதிகமான போசாக்கான இயற்கை உணவு வகைகள்  இலகுவாக கிடைக்கும். ஆனால் நகர்ப்புறங்களில் செயற்கையூட்டப்பட்ட உணவுகளை நோக்கிய ஒரு நுகர்வுச்சமூகமாக காணப்படுவதால் நகர்ப்புறங்களில் போசாக்கற்றதன்மை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்களே காணப்படுகின்றன.

அதேவேளை அண்ணளவாக இலங்கையில் பத்து வீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற குடும்பங்களாக இருக்கின்றன என 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகள் குறிப்பிடுகின்றன. உணவுப்பாதுகாப்பு என்பது போதுமான போசாக்கான சுகாதார கேடுகளற்ற உணவை பெற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதார நிலையைக்குறிக்கும். உதாரணமாக வயதிற்கேற்ற உடல்நிறை அல்லது உயரத்திற்கேற்ற உடல்நிறை இல்லாத 5 வயதிற்குட்பட்ட 15 தொடக்கம் 20 வீதமான சிரார்கள் இலங்கையில் உள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் போசாக்கு நிலையை பொருத்தமட்டில் இலங்கை 2006ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சிறந்த முன்னேற்றத்தை காட்டவில்லை.

உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை பட்டினி தொடர்பில் ஒரு சிறந்த இடத்தில் இருந்தாலும் இரண்டு விடயங்களை நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தவேண்டும்:

(1) எந்த கிராமமும் முழுமையான பட்டினிக்கு ஆளாகாவிட்டாலும் அக்கிராமத்தினுள் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையான வறுமையான குடும்பங்கள் மீது பட்டினி நிலை தொடர்பாக தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக அநாதைக் குடும்பங்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள், நோய் வாய்ப்பட்டிருக்கும் பெற்றோரைக்கொண்ட குடும்பங்கள் பட்டினி நிலையை மிகத்துரிதமாக அடைய முடியும்.

(2) வருடாந்தம் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்படும் பட்டினி நிலை. இது வரட்சி, நாட்டில் அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களில். அமைதியின்மை, இயற்கை அனர்த்தங்கள் வறுமையற்ற குடும்பங்களைக்கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வறுமையினுள்ளும் சில வேளைகளில் பட்டினி நிலைக்கும் இட்டுச்செல்ல முடியும். அரசின் தேசிய மாகாண மற்றும் பிரதேச ரீதியான பட்டினி ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக சேவை அமைப்புக்கள் சமூகத்தலைமைகள் இணைந்து செயற்படுவது பல்லின சமூகத்தில் எல்லா சமூகங்களையும் மையப்படுத்திய ஒருங்கினைந்த நிலையான சமூக இலக்குகளை துரிதமாக அடைந்து கொள்வதற்வதற்கான வழியேற்படும். இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும். பட்டினிக்கும் வறுமைக்கும் இன மத குல பேதங்களில்லை. மனிதம் வாழவேண்டுமானால் பசியும் வறுமையும் தீர்க்கப்பட வேண்டியது அடிப்படை