நிலைபேறான அபிவிருத்திக்கு எமது பங்களிப்பு -17

இறுதி நிலைபேறான அபிவிருத்தி இலக்கு: உலகளாவிய ரீதியில் 2030ல் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய அனைவரினதும் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. கீழுள்ள 16 நிலைபேறான சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைய உலகலாவிய ரீதியில், தேசிய, உள்ளுராட்சி மற்றும் சமூக மட்டங்களில் எல்லோரினதும் வினைத்திறனான அர்பணிப்புடனான பங்களிப்பில்லாமல் சாத்தியமாகாது.

1. வறுமையொழிப்பு, 2. பட்டினியின்மை, 3. சுகாதார மற்றும் ஆரோக்கியமான வாழ்வு, 4. தரமான கல்வி,

5. பெண்களின் சமூக வகிபாகம், 6. தூய்மையான நீர், 7. பொருத்தமான சக்தி வலு, 8. கௌரவமான தொழிலும் பொருளாதாரமும், 9. தொழில்துறை, புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு, 10. ஏற்றத்தாழ்வுகளற்ற நிலை, 11. நிலையான நகரங்களும், சமூகங்களும், 12. பொறுப்புமிக்க நுகர்வும், உற்பத்தியும், 13. காலநிலை மாற்ற பாதிப்புக்களை குறைப்பதற்கான செயற்பாடுகள், 14. நீர் வாழ் உயிரினங்கள், 15. புவி மேல் காணப்படும் வளங்கள், 16. சமாதான, நீதியான சூழலும் உறுதியான நிறுவனங்களும்.

கடந்த 16 வாரங்களாக மேலே குறிப்பிட்ட 16 நிலையான அபிவிருத்தி இலக்குகளைப்பற்றிய மிகச்சுருக்கமான குறிப்பை எழுதியிருந்தேன். இவை உலகளாவிய இலக்குகள் என்பதால் ஒவ்வொரு நாட்டிலும் அங்கு வாழும் பல்வேறு சமூகங்களுக்குமான அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்த சில குறிப்பிட்ட இலக்குகள் சேர்க்கப்பட வேண்டும். இலங்கையில் இன, மத, பிரதேச, அரசியல் ரீதியான பிரச்சினைகள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன. இந்நிலையில் சூழலியல் தொடர்பான பாதுகாப்பும் சமூக, பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கப்பால், இன, மத, பிரதேசங்களுக்கிடையிலான அரசியல், கலாச்சார, மத ரீதியான பிரிவினைகளுக்கான தீர்வுகளும் உள்ளடக்கப்பட்டு ஒரு மொத்த சமூக தேசிய வலுவூட்டல் திட்டமாக்கப்பட வேண்டும்.

முஸ்லீம்களைப்பொருத்த வரையில் மேலே சொல்லப்பட்ட 16 இலக்குகளும் இஸ்லாமிய சமூக, பொருளாதார, சூழலியல் தொடர்பான கோட்பாடுகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் மிக நெருக்கமானவை. பெரும்பாலும் பல உடன்பாடான விடயங்களையே நாம் காணமுடியும். எனவே சமூக தேசிய மட்ட மார்க்க தலைமைகளும், தமது செயற்திட்டங்களை இவ்விலக்குகளோடு இணைத்து தேசிய, பிராந்திய, கிராம அபிவிருத்திக்கு பங்களிப்புச்செய்வதில் முன்னிற்கவேண்டும்.

2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பாரிய கடன் சுமையை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் சூழலில், யுத்தத்திற்கு பின்னரான பல கோடி அபிவிருத்தி செயற்பாடுகள் உரிய இலக்கை அடைய தவறியிருக்கின்றன என்றே குறிப்பிடவேண்டும். அவ்வாறான நிலையான சமூக இலக்குகள் அடையப்பட்டிருந்தால், கடந்த யுத்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து நாம் மீட்சிபெற்றிருப்போம். ஆனால் கடந்த காலங்களை விட, மிக மோசமான நிலைக்கே நாடு சென்றுகொண்டிருக்கிறது. நாட்டில் காணப்படும் அரசியல் இஸ்திரத்தன்மையற்ற நிலை, பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் அனைத்து இனங்களுக்குமான அரசியல் தீர்வு, மிக அண்மைக்காலமாக உக்கிரமடைந்த இன, மத ரீதியான முரண்பாடுகள், அபிவிருத்தியின் உயர் மனிதாபிமான இலக்குகளை அடைவதற்கான சாதக சூழலை ஏற்படுத்தப்போவதில்லை. இவ்விலக்குகளை ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்து இவ்வாரத்துடன் நான்கு வருடங்களாகின்றன. இன்னும் 11 வருடங்களில் இவ்விலக்கினை அடையும் நோக்கிலேயே அனைத்து நாடுகளினதும் எதிர்கால செயற்திட்டங்கள் அமையப்போகின்றன.

முஸ்லிம் சமூகத்தினை பொறுத்த வரையில் அபிவிருத்தி இலக்குகளை விட இன, மத உரிமை மற்றும், இருப்பு சார் விடயங்கள் கடந்த சில வருடங்களாக முன்னுரிமைப்படுத்தப்பட்டன. இவ்விடயங்கள் ஏப்ரல் 21ன் பின்னரான சூழ்நிலையில் மீண்டும் வலுப்பெற்றிருக்கும் ஒரு சூழலில், தேசிய ரீதியான அரசியலில் பல்வேறு பாரிய மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையிலே தனியான பௌதீக, பொருளாதார, சமூக, அபிவிருத்தி கோசங்களை எந்தளவு தூரம் நாம் முன்னுரிமைப்படுத்தப்போகிறோம் என்ற பெரிய சவாலை அரசியல், சமூக தலைமைகள் எதிர்நோக்கியிருக்கின்றன. எந்நிலை வந்தாலும் நாம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை பொருளாதார, சமூக விடயங்கள், மற்றும் நாம் வாழும் சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பிற்படுத்த முடியாது.

2030ம் ஆண்டு வரை தேசிய, மாகாண, மற்றும் உள்ளுராட்சி ரீதியான அரச கட்டமைப்புக்கள் இவ்விலக்குகளை மையமாக வைத்தே இயங்கும். அதிகமான வெளிநாட்டு உதவிகளில் தங்கியுள்ள இலங்கைங்கு, வெளிநாடுகள் நிதியுதவியளிக்க ஐக்கிய நாடுகள் சபையின் 2030ம் ஆண்டை நோக்கிய மேலே குறிப்பிட்ட 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குரிய பங்களிப்பையே முன்னுரிமைப்படுத்துகின்றன. எனவே தேசிய, பிராந்திய அரசியல், சமூக தலைமைகளும், இவ்விலக்குகள் தொடர்பான தெளிவைப் பெறுவது மேலும் பல வளங்களையும் வாய்ப்புக்களையும் தமது சமூகங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். இவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஒவ்வொரு பிரதேச செயலாளர் மற்றும் மாநகர, நகர, பிரதேச சபைகளில் நடாத்தப்பட வேண்டும். இவற்றில் இன மத பேதங்களுக்கப்பால் அனைத்து அரச அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக, சமய தலைவர்கள், இளைஞர்கள் உள்வாங்கப்பட்டு ஒவ்வொரு பிரதேசத்திற்குமான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். சமூகத்தில் பலரிடம், குறிப்பாக துறைசார் வல்லுணர்களிடம் சமூகத்தின் நிலையான அபிவிருத்தி தொடர்பான தெளிவுகள் இருப்பினும், அவற்றிற்கான நிதி மற்றும் வளங்களை பெற்று நிலையான திட்டங்களில் முதலீடு செய்யும் முயற்சிகளில் நாம் தவறுவிடுகிறோம்.

எமக்கான சமூக, சமய, அரசியல், கலாச்சார இருப்பு, உரிமைகள் மற்றும் அபிவிருத்தி இலக்குகளை முன்னுரிமைப்படுத்தி அவற்றிற்கான திட்டங்களையும் செயற்பாடுகளையும் ஆரம்பிக்காத வரை எமது முயற்சிகள் சரியான விளைவுகளை பெற்றுத்தராது. எம்மை மறுபரிசீலனை செய்து மறுசீரமைக்க வேண்டிய மிக முக்கிய ஒரு காலப்பிரிவிற்கு வந்தடைந்திருக்கிறோம். இதையும் தவறவிடுவோமானால், எமது இளைஞர்களினதும் சிறார்களினதும் எதிர்காலம் கேள்விக்குறியே.