தூய்மையான நீரின்றி ஆரோக்கியமான வாழ்வில்லை – 06

2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 89% ஆன மக்கள் பாதுகாப்பான நீரை பெற்றுக்கொள்கிறார்கள். இலங்கையின் நுவரெலியா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 65% க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாப்பான குடிநீரை பெறுகிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலேயே ஆகக்குறைந்த வீதம் பதிவாகியுள்ளது (54%). அங்கு அதிகமான மக்கள் தோட்டங்களில் வாழ்வதால் பொது நீர்மூலங்களை பாவிப்பதால் அவை பாதுகாப்பானதாக காணப்படவில்லை. பாதுகாப்பான நீர் மூலங்கள் எனும் போது அது மூடப்பட்ட கிணறுகள் (protected dug wells), குழாய்க்கிணறுகள் (tube wells), நீர் வழங்கள் சபையினால் வழங்கப்படும் நீர் (Water Board) ,மற்றும் சமூக கிராம மட்டங்களில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் மூலமாக வழங்கப்படும் நீர் (Rural and community water supply schemes), போத்தலில் அடைக்கப்பட்ட நீர்  (Bottled water) போன்றவற்றை குறிக்கும்.

இலங்கையில் குடிநீர் தொடர்பான இரண்டு மிக முக்கிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒன்று வரட்சி காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது. மற்றையது பாதுகாப்பான குடிநீரின் தரம் நாட்டின் பல பகுதிகளில் மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. வருடம் தோறும் 8,000 க்கு மேற்பட்ட உயிரழப்புக்கள் சிறுநீரக நோயினால் (Chronic Kidney Diseases – CKDu) ஏற்படுகின்றன. இதற்குரிய சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் குடிநீரில் காணப்படும் பாரமான இரசாயண பதார்த்தங்களே என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்

கழிவகற்றலை (Sanitation) பொருத்தவரையில், இலங்கையில் பாதுகாப்பான முறையில் தமது வீட்டு வளவினுள் உள்ள கழிவகற்றல் வசதிகளை 87 வீதமான மக்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் 2 வீதமான மக்கள் மாத்திரமே ஒரு மத்திய கழிவகற்றல் (pipe sewerage) திட்டத்தினுள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அடர்த்தியாக மக்கள் வாழும் நகர்ப்புறங்களில் இவ்வாறான மத்திய கழிவகற்றல் திட்டமில்லாமலிருப்பது பல சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடும். குறிப்பாக இவ்வாறான கழிவகற்றல் வசதிகள் கொழும்பு, யக்கல, ஜாஎல, மொரட்டுவ, ரத்மலான போன்ற நகரங்களிலேயே காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 60 வீதமான மக்கள் நகர்ப்புரங்களில் வாழ்ந்தும் இவ்வசதி இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் நிலக்கீழ் மாசடைதல், சுகாதார சீர்கேடுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

நிலைபேறான முகாமைத்துவத்தினூடாக நீர் மற்றும் சுகாதார வசதிகளை அனைவருக்கும் உறுதி செய்தல் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை நோக்கி எமது அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்படல் அவசியமாகும். இவ்விலக்கை அடைய பின்வரும் விடயங்களில் தேசிய, உள்ளுராட்சி, மற்றும் சமூக நிறுவனங்கள், தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்.

  • பாதுகாப்பானதும் மற்றும் அனைவருக்கும் போதுமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்தல் மிக முக்கியமாகும். குடிநீர் பற்றாக்குறையுள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமானளவு குறைக்கப்படல் வேண்டும்
  • நிறைவான மற்றும் சமத்துவமான சுகாதார வசதிகள் அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவிற்கு கொண்டு வருதல்.
  • நீரின் தரத்தினை மேம்படுத்த மாசுபடுதலை குறைத்தல்¸ குப்பைகளை நீக்குதல் மற்றும் அபாயகரமான இரசாயன பொருட்களின் வெளியீட்டை குறைத்தல்
  • பராமரிக்கப்படாத கழிவு நீரினை  குறைத்தல்
  • கணிசமானளவு நீரினை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி அதன் மூலம் பாதுகாப்பான மறுபாவனைக்கான நீரினை பெற்றுக்கொள்ளுதல் முக்கியமாகும்
  • மலைகள்¸ காடுகள்¸ ஈர நிலங்கள்¸ஆறுகள்¸ நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் உட்பட நீர் தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு மீள்சுழற்சியில் பாவிக்கக்கூடியதாக அமைக்க வேண்டும்
  • கணிசமானளவு நீரின் பயன்பாட்டுத் திறன் அனைத்துத் துறைகளிலும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதுடன் குடிநீரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மீளப்பெறுதல் மற்றும் சுத்தமான நீரை வழங்குதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

எமது மக்களினதும் சமூகத்தினதும் கவனயீனமற்ற செயற்பாடுகள் – உதாரணமாக நீர் நிலைகளை மாசுபடுத்துதல் அளவுக்கதிமான நீர்ப்பாவனை சரியான நீர் முகாமைத்துவமின்மை காலநிலைகளில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ற நீரை சேமித்தல் மற்றும் பயன்படுத்தல் வழிமுறைகளைப்பற்றிய திட்டங்களின்மை போன்ற காரணங்களால் எதிர்கால சந்ததியினருக்கு நீரைப்பெறும் வாய்ப்புக்கள் இருந்தும் அவை குடிப்பதற்கு பாதுகாப்பற்றதாக மாறியிருக்கும்.

கடந்த காலங்களில் மிக அதிகமாக குழாய்க்கிணறுகள் நன்கொடை நிறுவனங்களால் வழங்கப்பட்டுவந்தன. அவை பிரதேச செயலகம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுடன் சரியாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளனவா? பல இடங்களில் பாவனையற்று காணப்படும் இக்குழாய்க்கிணறுகளால் பெருமளவு பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளை குடிநீரற்று பல மக்கள் வாழ்வதும் தரமான குடிநீர் வசதிகளில்லாமல் நோயினால் இறப்புக்கள் ஏற்படுவதும் நமது சமூக செயற்பாடுகளை வினைத்திறனுடன் செய்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. இவை தவிர பாடசாலைகள், மதஸ்தலங்களும் நீர் மற்றும் கழிவகற்றல் தொடர்பாக வினைத்திறனுள்ள செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டும். நீர் இலவசமாகவும் மலிவாகவும் கிடைக்கும் இக்காலத்தில் அதை சிக்கனமாக பயன்படுத்த தவறும் போது, உலகம் இன்னும் சில காலத்தில் எதிர்நோக்கும் நீருக்கான போரின் விளைவை நாமும் எதிர்கொள்வோம்.