சுகதேகியாக வாழ்தல் – நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 03 (விடிவெள்ளி)

வறுமையற்ற பட்டினியற்ற குடும்பங்கள் கிராமங்கள் நாடுகள் என இரண்டு மிக அடிப்படையான நிலைபேறான சமூக இலக்குகள் தொடர்பாக கடந்த வாரங்களில் எழுதினேன். இந்த வாரம் ஆரோக்கியமான நோய்களற்ற வாழ்வு தொடர்பான சமூக இலக்கினைப்பற்றி வெளிவருகிறது. ஒரு பிரதேசத்தின் அல்லது சமூகத்தின் எல்லா வயதுப்பிரிவுகளிலுமுள்ளவர்கள் சிறந்த உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதை உறுதிசெய்வது அவசியமாகும். அது குழந்தைகள் சிறுவர்கள் வாலிபர்கள் நடுத்தர வயதினர் மற்றும் வயோதிபர்கள் என எல்லா மட்டங்களிலும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் காணப்படுகின்றன. சில நோய்கள் குறிப்பிட்ட பிரதேசத்தின் சூழல் காரணிகளால் ஏற்படுபவை இன்னும் சில நோய்கள் பரம்பரைக்காரணிகளினாலும் வேறு சில நோய்கள் சமூகப்பழக்கவழக்கங்களினாலும் ஏற்படுபவை. நோய்களை தொற்றும் நோய்கள் தொற்றா நோய்கள் என்றும் பிரிக்கப்படும்.

(1) 100,000 பிரசவங்களில், பிரசவ நிலை இறப்புக்களை 70யை விட குறைத்தல். என்ற உலகலாவிய ரீதியான இலக்கிலிருந்து இலங்கை தொடர்ந்து ஒரு சிறந்த நிலையியே இருந்து வருகிறது. 1995 இல் 60 ஆக இருந்த பிரசவ இறப்புக்கள் 2105ல் 34ஐ ஆக குறைவடைந்துள்ளது. பொதுவாக இலங்கை சுகாதாரத்துறையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு மிகச்சிறந்த நிலையிலேயே காணப்படுகிறது.

(2) பிறந்த குழந்தைகளின் இறப்புக்கள் 1,000 இறப்பிற்க்கு 12 விட குறைவாகவும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் இறப்புக்கள் 1,000 க்கு 25 பேருக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும் என்ற உலகலாவிய ரீதியான இலக்கிலிருந்து இலங்கை சிறந்த நிலையிலுள்ளது. அதாவது பிறந்த குழந்தைகளின் இறப்புக்கள் 1,000 இறப்பிற்க்கு 6 ஆகவும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் இறப்புக்கள் 1,000 க்கு 10ஆகவுமே காணப்படுகின்றன.

(3) இவை தவிர நுளம்பு போன்ற காவிகளினால் பரவும் டெங்கு, தூய்மையற்ற மாசடைந்த நீரினால் ஏற்படும் டயரியா போன்ற தொற்றும் நோய்களினால் ஏற்படும் இறப்புக்கள் மற்றும் தொற்றா நோய்களான இருதய நோய் புற்று நோய் நீரிழிவு சிறுநீரக நோய்களின் ஏற்படும் இறப்புக்களும் குறைக்கப்பட வேண்டும். அத்தோடு போதைவஸ்து மற்றும் மது பாவனையின் ஒழிக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படும் உடல் நல கேடுகள் சமூக குற்றங்கள் இல்லாமல் ஆக்கப்படவேண்டிய தேவை எமது நாட்டில் காணப்படுகின்றது. இலங்கையில் அதிக மரணங்களுக்கு காரணமான போக்குவரத்து மற்றும் வீதி விபத்துக்கள் R+ழல் மாசடைதல் நீர் மற்றும் இரசாயண பதார்த்தங்களின் மாசடைதல் போன்ற மனித உடல் சுகாதாரத்திற்கு கெடுதிதரும் விடயங்களை தவிர்ப்பதற்கான திட்டங்கள் ஒவ்வொரு உள்ளுராட்சி சபை ரீதியாகவும் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் சிறுவயது திருமணம் இளம் வயது கர்ப்பமாதலை தவிர்த்தல் போன்ற விடயங்களும் சுகாதார மேன்பாட்டு இலக்குகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் இலங்கையை மலேரியாக்காய்ச்சலற்ற ஒரு நாடாக 2016ல் பிரகடனம் செய்தது. ஆனால் டெங்கு காய்ச்சல் தொடர்ந்தும் இலங்கையின் எல்லாப்பிரதேசங்களிலும் மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்றது. 2019ம் ஆண்டில், கடந்த ஐந்து மாதங்களில் இலங்கையில் 17129 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 8 மரணங்கள் வாகன விபத்துக்களால் ஏற்பட்டுள்ளன. இது 100,000 சனத்தொகைக்கு 14 பேர் மரணமடைந்துள்ளார்கள். இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 71 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களாகும். உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கக்கூடிய உணவுப்பழக்கவழக்கங்கள் மது புகைத்தல் போதைவஸ்து பொருட்களின் அதிகரித்த பாவனை மாசடைந்த சுழல் காரணிகள் தொற்றா நோய்கள் இலங்கையில் அதிகரித்து செல்ல காரணங்களாக அமைகின்றன.

மரணங்களையும் நோய்களையும் ஏற்படுத்தும் மேற்குறிப்பிட்ட எல்லா காரணிகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள, சிறந்த எல்லா மக்களையும் சென்றடையக்கூடிய தரமான சுகாதார சேவை அவசியமாகும். குறிப்பாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் சுகாதார வசதிகளை இலகுவில் பெற முடியாத கிராமப்புறங்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று இலங்கையைப்பொருத்தமட்டில் கிராமங்களை விட நகர்ப்புறங்களிலேயே அதிகமான சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் சுகாதார வசதிகள் மேம்பட்டிருந்தாலும் சுகாதார சீர்கேடுகளால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அடர்த்தியான சனத்தொகை வாழும் நகர மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களாகும். இப்பிரதேசங்களில் எத்தனையோ செல்வந்தர்கள் வர்த்தக நிறுவனங்கள் சமூக சார் அமைப்புக்கள் காணப்பட்டாலும் தாம் வாழும் சூழலை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்த தவறுகிறோம். அப்பிரதேச உள்ளுராட்சி சபைகளுக்கு உரிய அழுத்தங்களை வழங்கி சுகாதார மேம்பாட்டிற்கான வேலைத்திட்டங்களில் சமூகத்தலைமைகளும் அமைப்புக்களும் பங்காளர்களாகாமல் இருப்பது அரசியல் தலைமைகள் தமது கடமைகளை சரியாக செய்வதிலிருந்தும் பொருப்புக்கூறுவதிலிருந்தும் விலகிக்கொள்கின்றனர். அரச மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களும் இலஞ்ஞம் ஊழல் மயப்பட்டு தன் சமூகத்தற்கு செலவழிக்கப்பட வேண்டிய நிதி மோசடிசெய்யப்படுகின்ற துரதிஸ்ட நிலையையே நாம் காண்கிறோம். அதிகமான உள்ளுராட்சி சபைகளும் உறுப்பினர்களும் நீண்ட கால நிரந்தர தீர்வை நோக்கிய திட்டங்களை முன்வைக்காமல் தமது வாக்காளர் வங்கியை தக்கவைத்துக்கொள்ள குறுகிய அரசியல் இலாபம் தரும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருவது எமது நாட்டினதும் பிரதேசங்களினதும் நிரந்தர சமூக இலக்குகளை அடைவதில் பாரிய சவாலாக மாறியுள்ளது.