சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது – 05

இலங்கையின் மொத்த தொழிலாளர்களில் 38% ஆனோர் பெண்களாவர். எனினும் 8% வீதத்திற்கும் குறைவான பெண்களே உயர் பதவிகளை வகிக்கின்றனர். தொழில்துறைகளில் ஈடுபடுவோரிலும் அதிகமானோர் கூலித்தொழில் மற்றும் ஊதியமற்ற குடும்ப ரீதியான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாவர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக பல்லாயிரக்கணக்கான இலங்கைப்பெண்கள் பணிபுரிவதும் ஒரு பாரிய சவாலாகவே கருதவேண்டும்.  குடும்ப வறுமை மற்றும் சுமை காரணமாக தவிர்க்கமுடியாமல் பணிப்பெண் தொழிலைப்பெற்றுக்கொள்ளும் இவர்கள் பல பாலியல் உடலியல் வன்முறைக்குள்ளாகிவருகின்றனர். ஒரே தொழிலை செய்யும் ஆண்களுக்கு பெண்களை விட அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறது. சில வேலைகளில் ஒரேயளவான வேலைக்கு ஆண்களுக்கு பெண்களை விட இருமடங்கு சம்பளம் கொடுக்கப்படுகின்ற ஒரு சமநிலையற்ற வேலைத்தளங்களையும் தொழில்வழங்குணர்களையும் காண்கிறோம். இது தவிர  இலங்கையின் மொத்த குடும்பங்களில் 24% பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கின் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் இது 40% ஆகவும் காணப்படுகிறது. அதிகமான வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள்,  மற்றும் சமூகங்களினால் ஒதுக்கப்பட்ட குடும்பங்களாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களே காணப்படுகின்றன.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இலங்கையில் பெண்களுக்கு சாதகமான சூழல் இல்லாமலில்லை. உதாரணமாக பிரசவத்தின் போதான சிசு இறப்பு ஒரு இலட்சம் பிறப்புக்களுக்கு 34 ஆக காணப்படுவது ஒரு சிறந்த நிலையாகும். தெற்காசிய நாடுகளில் சிசு இறப்பு  அண்ணளவாக 182 ஆகும். அதேபோல் ஆரம்ப இரண்டாம் மூன்றாம் கல்விநிலைகளை பூர்த்திசெய்யும் பெண்களின் வீதமும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி  உயர் கல்வியை பூர்த்திசெய்யும் பெண்களின் வீதமும் அதிகரித்துச் செல்கின்றது. இருப்பினும் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் உள்ளடங்கலாக இயற்கை விஞ்ஞான துறைகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. குறைந்த ஊதியம் மற்றும் உயர்பதவிகளுக்கு செல்லும் வாய்ப்புக்கள் பெண்களுக்கு குறைவாக காணப்படுவதற்கு இவையும் காரணங்களாகும். இலங்கையை பொருத்தவரையில் மிக அதிகமான பெண்கள் ஆசிரியர் தொழில் மற்றும் இலிகிதர், நிர்வாக உதவியாளர் போன்ற தொழில்களிலும், தொழிற்சாலைகளில் குறிப்பாக ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, எதிர்காலத்தில் இந்த வேலைகளுக்கான சந்தையை நவீன இயந்திரங்கள் ஈடுசெய்வதால், மேலும் தொழிலற்ற நிலை உருவாகும். உதாரணமாக அண்மையில் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் ஆடை தைக்கும் ஒரு தானியங்கி ரொபாட்டை பொருத்தியதன் மூலம் 10 நபர்கள் சேர்ந்து உற்பத்தியாக்கும் 669 டீ-சேர்ட்களுக்கு பதிலாக, ரொபாட்  எட்டு மணித்தியாலங்களில் 1,142 டீ-சேர்ட்களை உற்பத்தி செய்கிறது.

பெண்கள் மூன்றாம் நிலைக்கல்வியில் மிகச்சிறந்த பெறுபேறுகளையும் அடைவுகளையும் பெற்றும் அவர்கள் தொழில்களுக்கு செல்லாமல் இருப்பதும், தொழில் செய்பவர்கள் தொழில் சந்தையில் தமது திறமைகளை வெளிக்கொணவர்வதிலும் உயர் பதவிகளை அடைவதிலும் பின்னிட்பது பெண்களின் சமூக ரீதியான சமநிலைக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் சமூக அரசியல் பொருளாதார பொது தளங்களில் பெண்களின் வகிபாகம், மற்றும் சமூக பங்குபற்றல் தொடர்பான பிற்போக்கான கலாச்சார மற்றும் சமூக ரீதியான பிழையான சித்தரிப்புக்களே பெண்களின் பங்களிப்பு வீதம் குறைவடைந்து காணப்படுவதற்கான பிரதான காரணமாகும்.

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், சிறுவயது/கட்டாயத் திருமணம், பொது மற்றும் தொழில்புரியும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், இளம் பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளும் நிறுத்தப்படல் வேண்டும். அத்துடன் பெண்களின் சமூகப்பங்களிப்பிற்கு தடையாக இருக்கும் ஏனைய காரணிகள் நீக்கப்பட்டு பெண்களின் சமூக செயற்பாட்டிற்கான சாதகமான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கையில் பெண்களின் பாராளமன்ற பிரதிநிதித்துவம் 6 வீதத்தையும் விட குறைவாகும். தெற்காசிய நாடுகளில் இது 18 வீதமாகும். அரசியல் ரீதியாக உள்ளுராட்சி மன்றங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கமைய 25வீதமான பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நேரடி தேர்தல் களத்தில் தமது வட்டாரங்களில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் மிகக்குறைவாகும். இந்நிலை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் கல்வி ரீதியான அடைவுகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், சமூக அரசியல் ரீதியான பங்களிப்பை இன்னும் ஏற்க தயாரற்ற நிலையையே காட்டுகிறது. பெண்களின் பங்களிப்பு தொடர்பாக தொடர்ந்தும் ஒரு சில பெண் சமூக செயற்பாட்டாளர்கள் விவாதித்து வருகின்றனர். எனினும், பெரும்பாலும் அனைத்து தலைமைத்துவ மற்றும் உயர் சபைகளில்  ஆண்-பெண் சமநிலையற்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் ஒரு சவாலாகவே காணப்படுகின்றது.

தேசிய ரீதியான வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு சமூகத்திலும் அவ்வப்பிரதேசங்களில் முதன்மைப்படுத்தப்பட்ட பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, அவற்றிற்கான தீர்வுகளை சமூகத் தலைமைகள் அரச ஊழியர்களின் உதவியுடன் முன்கொண்டு செல்ல வேண்டும். பெண்களின் முழுமையானதும் வினைத்திறனானதுமான பங்குபற்றல் மூலம் அரசியல்¸ பொருளாதார சமூக ரீதியான மற்றும் பொது வாழ்க்கை சம்பந்தமாக முடிவுகளை மேற்கொள்ளும் சகல படிநிலைகளிலும் பெண்களின் தலைமைத்துவத்துக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்.

சமூக வலுவூட்டல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு ஆங்காங்கே சில காணப்பட்டாலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இன்னும் அவை சரியாக வெளிக்கொணரப்படவில்லை. அதற்கான சாதகமான சமூக சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். மலேசியா, இந்தோனேசியா மற்றும் மேற்கத்தைய நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பலர் பல்வேறு துறைகளிலும் உயர் நிலையில் பிரகாசித்துகொண்டிருக்கும் இக்காலத்தில், இலங்கையில் பெண்களின் வகிபாகத்தையே கேள்விக்குட்படுத்தும் போக்கு இன்னும் எமது சமூகத்தை பின்னோக்கி நகர்த்துமே தவிர, பெண்களின் கல்வி ரீதியான உயர் அடைவுகள் வெறும் சான்றிதழ்களுடன் குறுகிவிடக்கூடிய அபாயத்தையே நாம் எதிர்கொள்வோம்.