சமத்துவமின்மை – சமூக அபிவிருத்திக்கு பாரிய சவால் – 10

அதிக வறுமையைப்போன்று அதிகளவிளான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அபிவிருத்தி இலக்கை அடைவதில் மிகப்பாரிய சவாலாகவே காணப்படுகின்றது. சமத்துவமின்மை எனும்போது அது பெரும்பாலும் பொருளாதார சமத்துவமின்மையை மையப்படுத்தியதாகவே அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கை போன்ற இன ரீதியான பாகுபாடுகள் அதிகமாகவுள்ள சமூக சூழலில் சமூக, கல்வி, அரசியல் ரீதியான அடிப்படை விடயங்களில் சமத்துவம் முன்னுரிமைப்படுத்தப்படுவது இன்றியமையாததாகிறது. உதாரணமாக, சமத்துவமின்மையை நீக்க அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கப்படுவதும், சமமான சேவைகள் பெறும் வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவதும் மிக முக்கியமாகும். ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான சமத்துவமின்மையை குறைத்தல் எனும் இலக்கு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் குறிப்பாக:

  1. 2030களில்¸ அடிமட்டத்திலுள்ள மக்களின் 40 வீதத்தினரின் வருமானத்தை நிலைபேறாக தேசிய சராசரியை விட அதிகமான வீதத்தில் பேணுதல்
  2. 2030களில்¸ அரசியல்¸ சமூக¸ பொருளாதார ரீதியில் அனைவரையும் ஊக்கப்படுத்தி, வயது, பால், இயலாமை¸ சாதி¸ இனம்¸ பிறப்பிடம் அல்லது பொருளாதாரம் அல்லது ஏனைய நிலைமைகளின் வேறுபாடுகளுக்கப்பால் வலுப்படுத்த வேண்டும்.
  3. சமமான வாய்ப்புக்களை உறுதி செய்து, விளைவுகளின் சமத்துவமின்மையை நீக்குதல், மற்றும் அதற்கான சட்டங்கள்¸ கொள்கைகள்¸ நடவடிக்கைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல், பாரபட்சமான சட்டங்கள்¸ கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நீக்குதல்.
  4. நிதி¸ ஊதியம், மற்றும் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகளை (social security schemes) சரியாக நடைமுறைப்படுத்தி படிப்படியாக சமத்துவத்தை நிலைநாட்ட முடிதல்.

இலங்கை சனத்தொகையில் சராசரி தேசிய வருமானத்தில் 50 வீதத்திற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்கள் 13 வீதமாகும் (2016). பால் ரீதியான – ஆண்கள் பெண்கள் எனும் அடிப்படையில் சமூக ரீதியான பல சமத்துவமற்ற விடயங்களுக்கு உலகலாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கான கல்வி, தொழில் மற்றும் அரசியல் ரீதியான உரிய வகிபாகத்தை பெற்றுக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதும், வரவேற்கத்தக்கது. ஆனால் இவற்றிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப்போல் பொருளாதார மற்றும் ஏனைய சமூக ரீதியான சமத்துவமின்மையை இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படுவதில்லை. வறுமை ஒழிப்பின் மூலம் மாத்திரம் சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முடியாது. வறுமை ஒழிப்பு, சமூக ஏற்றத்தாழ்வை குறைப்பதற்குரிய ஒரு காரணி மாத்திரமே.  ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் சிறந்த நிலையில் இருந்தும் இலங்கையின் சமூக மட்டத்தில் குறிப்பிடத்தக்களவான ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய இஸ்லாம் கூறும் வறுமை ஒழிப்பு, சொத்து பங்கீடு, கடன் பெறல்/வழங்கும் முறைகள், வர்த்தக விழுமியங்கள் போன்ற சமூக பொருளாதார விடயங்களை வெறுமனே முஸ்லிம் சமூகத்திற்குள் மாத்திரம் முடக்காமல், அக்கொள்கைகள் தேசிய, பிராந்திய ரீதியான, சமூக நீதி, மற்றும் சமூக அபிவிருத்தி கொள்கைகளாக முன்வைக்கப்பட வேண்டும். பல்லின, பல மதங்களைக்கொண்ட சமூகத்தில் ஒரு மதத்தினை மையப்படுத்திய கொள்கையாக அல்லாமல், அது முழு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் முன்வைக்கப்படவேண்டும்.

இலங்கையின் மொத்த GDPல் சராசரி 10 வீதம் வெளிநாட்டில் தொழpல் செய்யும் இலங்கையர்கள்; தனது குடும்பங்களுக்கு அனுப்பும் வருமானத்தில் தங்கியுள்ளது. இலங்கை சனத்தொகையில் 8ல் ஒரு குடும்பம் இந்த வெளிநாட்டு தொழில் வருமானத்தில் தங்கியுள்ளது. இலங்கை அரசு 2017ம் ஆண்;டில் வெளிநாடுகளுக்கு தொழில் செல்பவர்களின் ஆகக்குறைந்த வருமானமாக, 300 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயம் செய்தது. எனவே இவர்களின் ஆகக்குறைந்த ஊதியத்தொகையை வரையறுத்து அவர்களின் குடும்ப வUமான பாதுகாப்பை ஏற்படுத்தியது. ஆனால் உள்நாட்டில் சரியான வளப்பகிர்வு, நீதியான முறையில் தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், அவற்றிற்கான சரியான கொள்கைகளை முன்னெடுப்பதில் அரசு தொடர்ந்தும் பின்னிற்கிறது. இன ரீதியான முரண்பாடுகள் இந்நிலையை மிகவும; மோசமாக்கியுள்ளது.

இலங்கையில் தொழில்களில் பாரபட்சம், இளைஞர்கள் தொடக்கம் உயர் பதவிகள் என எல்லா மட்டங்களிலும் புரையோடிப்போயிருக்கிறது. திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படமால், திறமையின் அடிப்படையில் தொழில்களும் பதவிகளும் கொடுக்கப்படுவதற்கான கொள்கைகள், வெறும் சட்டத்திலும் சுற்றறிக்கைகளிலுமே காணப்படுகிறதே ஒழிய, அனைத்து அரச தொழில்களும், வழங்கும் முறைகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் திறமைசாலிகள் வெளிநாடுகளுகளில் சிறந்த தொழில்களுக்கான புகலிடத்தை பெறுகிறார்கள். இறுதியில் அரசியல்வாதிகளில் தங்கி வாழும் இளைஞர்களும், அரசியல் அனுசரனையில் பதவிகளை அலங்கரிக்கும் சில அதிகாரிகளும் இந்நாட்டில் மீதமிருப்பர். இந்நிலையில், வினைத்திறனான அரச இயந்திரத்தையும் இளைஞர் வலுவையும் இந்நாட்டில் எப்படி எதிர்பார்க்க முடியும்.

சமூக ரீதியான அனைத்து அநீதிகளுக்கும் எதிராக செயற்பட வேண்டிய கற்ற, மற்றும் துறை சார் வல்லுணர்கள், சமூக அரசியல் தலைமைகள்; அநீதியின் அங்கமாக மாறி ஊழல், இலஞ்ஞம், பதவிகளுக்காக மனித சமூக விழுமியங்களை மீறிய, ஒரு அரச/சமூக இயந்திரம் இந்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அநீதிக்காக குரல் கொடுக்கும் தனிநபர்கள், துறைசார் நிபுணர்கள், மக்களின் ஆதரவுத்தளமற்றவர்களாக காணப்படுகின்றனர். அநீதியை மனதால் வெறுப்பதே மிகப் பெரிய மார்க்க கடமையாக காணப்படும் போது, நீதிக்காக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பேசுபவர்களையும் செயற்படுபவர்களையும், ஏன் இந்த சமூகம் இன்னும் கண்டுகொள்ளாமலிருக்கிறது. அவர்களுக்குரிய அரசியல் சமூக அதிகாரங்களை உரிய நேரத்தில் வழங்க தவறுகிறோம். மாற்றத்திற்கான காலம் கனிந்து பல வருடங்களாகிவிட்டன. அது மிக விரைவில் வெறுமனே மாற்றமில்லாமல் நம்மை கடந்தும் செல்லும், நாமும் நமது சமூகமும் மாறாத வரை.