சஜா விடிவெள்ளியில் எழுதும் நிலையான சமூகத்தை நோக்கி என்ற தலைப்பிலான வாராந்த குறிப்பு

இவ்வுலகில் வறுமையில்லா வாழ்வு என்பது ஒரு மிகப்பெரிய இறையருள். வறுமையின் அகோர பிடியிலிருந்து ஒரு மனிதன் விடுபட்டு வாழ்வானேயானால் அது இறைவன் அவனுக்கு இவ்வுலகில் வழங்கிய மிகப்பெரும் அருள்களில் ஒன்று. கொடிய வறுமை ஒரு மனிதனின் வாழ்வின் அனைத்து விடயங்களையும் பின்னோக்கி நகர்த்துகிறது. அது ஒரு மனிதனின் இறைதொடர்பை இறைஞாபகத்தைக்கூட பலவீனப்படுத்துகிறது. வறுமையின் அகோரம் அவன் வாழும் சமூகத்தில் அவனை பலவீனப்படுத்துவது மட்டுமன்றி வறுமையில் வாழும் மனிதர்களையும் குடும்பங்களையும் கொண்ட சமூகமும் ஊர்களும் முன்னேற்றப்பாதையில் பயனிப்பதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன.

ஏழ்மையை இல்லாதொழிப்பது எமது சமூக அபிவிருத்தி இலக்குகளில் முதன்மையானதாக கருதப்படவேண்டும். இந்த ரமழானை வறுமையற்ற சமூகத்தை நோக்கிய இலக்கை மையமாக வைத்து எமது பொருளாதார பங்கீட்டை தனிநபராகவும் சமூகமாகவும் அரச நிறுவனங்களுடன் இணைந்து ஆரம்பிப்போம்.

“ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும் எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும்” எனும் கோசமே 2030ல் பூகோள ரீதியான நிலையான அபிவிருத்தியின் முதன்மை இலக்காகும். இன்னும் 10 வருடங்களில் எமது கிராமத்தில் எமது மாவட்டத்தில் எமது மாகாணத்தில் எமது நாட்டில் எந்தவொரு நபரும் எந்தவொரு குடும்பமும் அடிப்படை வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடாது என்ற சமூக ஒப்பந்தத்தை நோக்கிய இலங்கை அரசின் தேசிய இலக்குடன் எமது வறுமை ஒழிப்பு திட்டங்களை ஒன்றினைப்போம்.

எமது ஸகாத் ஸதகா போன்ற தர்மங்களை நாட்டின் தேசிய பிராந்திய ஊர் வறுமை ஒழிப்பு திட்டங்களினூடாக எவ்வாறு செயற்படுத்த முடியும் என சிந்திப்பது திட்டமிடுவது நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சமூக தலைவர்களின் கடமையாகும்.

2016ம் ஆண்டு கணக்கீட்டின் படி இலங்கையில் 4.1 வீதமான மக்கள் தேசிய வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். தேசிய வறுமைக்கோடு என்பது மாதாந்தம் 3,624 ருபாவையும் விட குறைந்த பெறுதலாகும் – அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு தனது மிக அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான மிகவும் குறைந்த வருமான அளவீடே ஆகும். இலங்கையின் தேசிய வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களில் அதிகமானோர் வடக்கு கிழக்கில் வாழ்கிறார்கள் என புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முல்லைத்தீவு 12.7 வீதமானோர் கிளிநொச்சி 18.2 வீதமானோர் மட்டக்களப்பு 11.3 வீதமானோர் மற்றும் திருகோணமலை 10.0 வீதமானோரும் ஆகும். இதை விட ஏனைய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில கிராம சேவகர் பிரிவுகள் மற்ற கிராம சேவகர் பிரிவுகளை விட தீவிர வறுமையில் வாழும் மக்களை அதிகம் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் தேசிய ரீதியான வறுமை ஒழிப்புத்திட்ட வரையறைக்குள் அரச நிறுவனங்களுடன் இணைந்;து முன்னெடுக்க அப்பிரதேசங்களிலுள்ள ஸகாத் ஸதகா விடயங்களை செயல்படுத்தும் பள்ளிவாசல்கள் நிறுவனங்கள் முன்வருவது காலத்தின் தேவையாகும்.

இலங்கை அரசாங்கம் சமுர்த்தி முதியோருக்கான கொடுப்பனவு மாற்று திறனாளிகளுக்கான கொடுப்பனவு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவு என பல்வேறு தேசிய வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன. இலங்கை சனத்தொகையின் 34 வீதமான மக்கள் ஏதோவொரு வகையில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மற்றும் சமூக காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மையடைந்திருக்கிறார்கள். அதேபோல் 45 வீதமான 60 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் அரசின் சமூகப்பாதுகாப்பு திட்டங்களின் மூலம் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அரச சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் இரண்டு பிரச்சினைகள் காணப்படுகின்றன. முதலாவது சரியான தகவல்களைப்பெற்று அதிக தேவையுடைய பயனாளிகள் தெரிவுசெய்யப்படுவதில்லை இரண்டாவது சவால் சிறிய கொடுப்பனவுகள் அதிகமானோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் அதிக வறுமையின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு தமது வறுமையிலிருந்து வெளியேற போதிய உதவித்தொகை கிடைக்கப்பெறாமையுமாகும். ஆனால் இவ்வாறான திட்டங்களின் மூலமாக மாத்திரம் வறுமை ஒழிப்பு இலக்கை அடைவதில் பல சவால்கள் உள்ளன. எனவே ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் இவை தொடர்பான தகவல்களைப்பெற்று சமூகத்தலைமைகள் அரசின் தேசிய பொருளாதார வறுமை ஒழிப்புதிட்ட வரைபினுள் தமது சமூகத்தின் பொருளாதார வறுமை ஒழிப்பு செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல வேண்டும். முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் மையம் கொண்ட வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, தேசிய பிராந்திய அபிவிருத்தி இலக்குகளுக்குள் நின்று சிந்திப்பது அவசியமாகும்.