கழிவு முகாமைத்துவத்திற்கான மொபைல் செயலி

02-Jan-2018

ivoice இன் சமூகப்பிரச்சனைகளை தீர்க்கும் புத்தாக்கமான ஆலோசனைகளுக்கான போட்டியில் கல்முனையை சேர்ந்த அர்ஷத்தும் கலந்து கொண்டிருந்தார். கல்முனை நிர்வாகப்பிரிவின் சாய்ந்தமருதுப்பகுதியில் கழிவுகளை முகாமை செய்வது பெரும் பிரச்சனையாக இருக்கிறது எனவும் இருக்கும் வளங்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி சேவையை வினைத்திறனாக மேம்படுத்துவது என்பதையே அர்ஷத் தனது ஆலோசனையில் முன்வைத்திருந்தார்

அர்ஷத் ஆரிப்

அர்ஷத் முன்வைத்த ஆலோசனையானது கழிவுகளை சேகரிக்கும் வண்டி எங்கே வருகிறது? எப்போது எங்கே வரும்? மக்கள் எவ்வாறு அந்த தகவல்களை பெற்றுக்கொள்வது, வண்டி அவர்களது வீட்டுக்கு அருகில் வரும் போது அவர்களுக்கு தகவல் தெரிவிப்பது, மக்கள் தங்கள் பின்னூட்டத்தை தெரிவிக்க முடிவது போன்ற விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கி மொபைல் செயலி ஒன்றை உருவாக்குவதாகும். ஒரு தெருவில் குறைந்தது 5 android தொலைபேசிகள் இருக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையில் கைத்தொலைபேசிகளில் இந்த செயலியை இணைப்பதன் மூலம் மக்கள் அந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என கணிக்கப்பட்டது. அவரது ஆலோசனை ivoice பரிசுப்பணத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. குறித்த மூன்று மாத காலத்துக்குள் அர்ஷத் தன்னுடைய ஐடியா கீக் நிறுவனத்தின் மூலமாக, you can என்ற இளைஞர்கள் குழுமத்தின் ஆதரவுடன் அச்செயலியை வடிவமைத்திருந்தார். அத்தோடு அவர்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையின் உதவியையும் நாடியிருந்தனர்.

அர்ஷத்தின் மொபைல் செயலி கல்முனை மாநகர சபை ஆணையாளரால் வெளியிட்டு வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

சமீபத்தில் இந்த செயலியானது கல்முனை மாநகர சபை ஆணையாளர் திரு. லியாகத் அலி முன்னிலையில் விரிவாக விளக்கப்பட்டது. அவர் இந்த செயலி மிகவும் உபயோகமானது என்றும் எதிர்காலத்தில் இதனை பாவனைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நம்பிக்கை அளித்தார். அத்தோடு கல்முனை மாநகர சபையில் குப்பைகள் உக்கும் குப்பைகள் உக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு அகற்றப்படுவதற்கான விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இளைஞர்கள் புத்தாக்கமான தீர்வு ஒன்றை கண்டுகொண்டதோடு அதை உரிய அதிகாரிகள் வழியாக அதை நடைமுறைப்படுத்தவும் வகை செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.

https://www.ivoice.lk