கடல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாப்போம் – 14

இலங்கை ஒரு தீவாக இருப்பது, எமக்கு – குறிப்பாக கரையோரங்களில் வாழும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வளம். இலங்கையின் கடல் சார்ந்த பகுதி இலங்கையின் நிலப்பரப்பின் 8 மடங்கு என கணிப்பிடப்படுகிறது. இலங்கையை சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பிரதேசங்கள் மிக முக்கிய பொருளாதார மற்றும் வாழ்வாதார கேந்திர நிலையங்களாகும். இது இலங்கை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். குறிப்பாக மிக அதிகமான கடலை அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தின் குடியிருப்புக்களையும் மிக முக்கிய நகரங்களையும் காண்கிறோம். எனவே கடல் மற்றும் கடல் சார்ந்த தொழில் துறைகளில் மிகவும் பொறுப்புடன் வினைத்திறனுடனும் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய கடப்பாடு எமக்கும், எமது சமூக அரசியல் தலைமைகளுக்கும் உண்டு.

இலங்கையின் புவியியல் கேந்திர மையம் கடல் போக்குவரத்தை மையமாக கொண்டே அமைந்துள்ளது. தென் மேல; கடற் பகுதியில் சீனாவும் வடக்கில் இந்தியாவும், கிழக்கில் இந்தியா, அமெரிக்க ஆதிக்கம் செலுத்த முனைவதை அண்மைய அந்நாடுகளின் பொருளாதார முதலீடுகள், இராஜதந்திர முன்னெடுப்புக்கள் என்பன நாம் அறிந்ததே. மன்னாரைச்சுற்றி எண்ணெய் வளங்கள் காணப்படுவதாக அறியப்பட்டு அது தொடர்பான ஆராய்ச்சி, தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு பல நாடுகள் முயற்சிப்பதும், கொழும்பு துறைமுக நகரம் என கடல் பரப்பை மூடி உருவாக்கப்படும் பாரிய நகர அபிவிருத்திக்கு பல நாடுகள் முதலீடு செய்ய போட்டிபோட்டுக்கொள்வதும், கிழக்கின் துறைமுகத்தில் வெளிநாடுகள் தமது இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதற்கு பின்னால;, இலங்கையின் கடல் பரப்பு ஒரு பிராந்திய அரசியல் கேந்திர நிலையமாக மாறி வருகிறது.

கடல், மற்றும் கரையோர பகுதிகளில் பகுதிகளில் துறைமுகம் மற்றும் கப்பல் துறை, மீன்பிடி, சுற்றுலாத்துறை, மீன் வர்த்தகத்துடன் தொடர்பான தொழில்சாலைகள் என பல பொருளாதார வாழ்வாதார வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 3 இலட்சத்திற்கு அதிகமான மீனவர்கள், மற்றும் மூன்றரை இலட்சத்திற்கும் மேலான சுற்றுலாத்துறை தொடர்பான தொழில்களை கடலும் கடல் சார்ந்த பிரதேசங்களும் எமக்கு வாழ்வாதாரத்தை தந்து கொண்டிருக்கிறது. கடல் தொழிலைப்பொருத்தமட்டில் கரைவலை மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி முக்கியத்துவம் பெறுகின்றது. இது தவிர, இலங்கையின் கடற்கரைகள், கடல் வாழ் உயிரினங்கள் சுற்றுலா பயனிகளை அதிகம் கவர்ந்தவை.

கடலும் கடற்கரைகளும் எவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு கொடுத்தாலும் நாம் அவற்றை எமது செயற்பாடுகளின் மூலம் மாசுபடுத்துகிறோம். எமது கரையோரங்களை நாமும் நமது பிள்ளைகளும் பாவிக்க முடியாதளவு மாசுபடுத்தி வைத்திருக்கிறோம். சுவாசமான காற்றையும் கடலோர சுவாத்தியங்களையும் நாடி செல்லும் நாம் அவற்றை மற்றவர்கள் அனுபவிக்க முடியாதளவு குப்பைகளால் நிரப்பிவிட்டு திரும்புகிறோம். உள்ளுராட்சி நிறுவனங்கள் கூட கடலோரங்களில் சேரும் குப்பைகளை சரியாக முகாமைத்துவம் செய்ய தவறுகின்றன. இவை தவிர சில இடங்களில் விவசாய செய்கையின் போது  பாவிக்கப்படும் இரசாயண வகைகள் தொழிற்;சாலைகளில் வெளியேறும் கழிவுகள் சுற்றுலா விடுதிகள் பிரதேசங்களிலிருந்து வரும் கழிவுகள் என்பன முறையாக அகற்றப்படாமல் கடலுடனும் கடற்கரையோரங்களையும் மாசுபடுத்துகின்றன.

எனவே நிலையான அபிவிருத்தி இலக்குகளில் கடல் மற்றும் கடல் சார்ந்த கரையோர விடயங்களின் வகிபாகம் இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு மிக முக்கியமாகும். குறிப்பாக:

– அனைத்து விதத்திலுமான கடல் மாசுபாடு¸ கடல் குப்பைகள் மற்றும் மாசுபாடுகளும் தடுக்கப்படுதலும் மற்றும் குறிப்பிடப்பட்டளவு குறைக்கப்படுதலும் வேண்டும்.

– கடல்சார்ந்த மற்றும் கடலோரச் சுற்றுச்சூழலை நிலையாக நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் மூலம் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை தவிர்க் முடிவதுடன், ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க கடல் நீர் வளங்களை உருவாக்குதல்.

– சட்டத்திற்கு புறம்பானதும்¸ பதிவு செய்யப்படாததும் மற்றும் முறையற்ற மீன்பிடித்தல்¸ நாசகரமான மீன்பிடித்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல்.

– கடல் வளங்களின் நிலையான பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டியதுடன் இவற்றின் மூலம் மீன்வளம்¸ மற்றும் சுற்றுலாத்துறை என்பவை நிலையான

முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடற்தொழில், சுற்றுலாத்துறை, கரையோர பொழுதுபோக்கு பிரதேசங்கள் எமது பொருளாதாரத்திக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அதே போல் அதன் சூழலை பாதுகாப்பதும் எமது கடமை. உள்ளுராட்சி சபைகளும் அரச நிறுவனங்களும் இவற்றுக்கான சட்டங்களையும் விதி முறைகளையும் மக்களின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்த வேண்டும். எமது மாநகர நகர சபை முதல்வர்களும் உறுப்பினர்களும் இவற்றில் கரிசனையற்று காணப்படுகின்றனர். தேர்தல் காலங்களில் கடற்கரையோரங்களில் மேடைகளைமைத்து முழங்கிவிட்டு, அங்கே அனைத்து கழிவுகளை விட்டு விட்டு செல்கின்றனர்.

தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அபிவிருத்தி யுகத்தை பேச்சளவிலேயே கொண்டிருக்கின்றனர். இவர்களின் சிந்தனைக்கு சரியான தெளிவு வருவதற்கிடையில் நாட்டின் கடற்பரப்பு வெளிநாடுகளுக்கு எந்த கட்டுப்பாடும் ஒப்பந்தங்களும் இல்லாம் தாரைவார்கப்பட்டு விடும். அரசியல் கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு, பிரதிநிதிகளுக்கு தேர்தல் நேரங்களில் வெறும் வாக்குகளை இறைக்காமல் குறிப்பாக மீனவ சமூகம் தமது வளங்களை சரியாக பயன்படுத்த அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். 

கடல், கடல் சார், கடற்கரை வளங்களை அவற்றின் சூழல் மாசடையாத வழிமுறையில் பொருளாதார வாழ்வாதார மற்று தொழில் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதை நீலப்பொருளாதாரம் (Blue economy) என அழைப்பர்.  கடல் வளங்களை குறிப்பாக மீன்பிடியில் இலங்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது – அதிலும் சுனாமி மற்றும் யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட முறைகள் மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் கடல் வாழ் உயிரனங்கள் அதிகளவான கழிவுகளை அதிலும் குறிப்பாக மைக்ரோ பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்வதாகவும், கடலில் உலக சனத்தொகையை விடவும் அதிகமான பிளாஸ்டிக் காணப்படுவதாகவும் அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் நாம் மைக்ரோ பிஸாஸ்டிக் நிறைந்த மீன்களையே உண்ணவேண்டிய நிலை ஏற்படும். உலகிலேயே எந்தவித உற்பத்தி மூலதனமின்றி கிடைக்கும் உணவுப்பொருளான கடல் மீன்களை நாமே மாசுபடுத்தி நாமே மீண்டும் உண்ணும் நிலையை தவிர்ப்போம்.