உட்கட்டமைப்பிலும் தொழில்மையங்களிலும் புத்தாக்கத்தின் அவசியம் – 09

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது நிலைபேறான அபிவிருத்தி இலக்காக உறுதியான உட்கட்டமைப்பினை கட்டியெழுப்புவதுடன் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான தொழில் மையமாக்கத்தினையும் புத்தாக்கத்தையும் வளர்த்தல் அமைந்துள்ளது.

இவற்றில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த தரம் வாய்ந்ததாக மேம்படுத்தல் என்ற இலக்கை பொருத்தவரையில், அண்மைய அபிவிருத்தி திட்டங்களில் நீண்ட கால நிலையான அபிவிருத்தி நோக்கங்களின் அடிப்படையில் கட்டடக்கலை கலந்த நகரங்கள் உருவாக்கப்படவில்லை. குறிப்பாக இலங்கையில் காணப்படும் 23 மாநகர சபை பிரதேசங்களில் அதீத சனத்தொகை அடர்த்தியின் காரணமாக அப்பிரதேச கட்டடங்களும் உட்கட்டுமானங்களும் சரியாக முகாமைத்துவம் செய்யப்படாமையால் இந்நகரங்கள் தொடர்ந்தும் வினைத்திறனுடன் செயற்பட முடியாமல் காணப்படுகின்றன. ஸ்மாட் சிடி என்ற நவீன நகர அபிவிருத்தி வழிமுறையில் ஒரு நகரமாவது இலங்கையில் இல்லை. அவை அரசியல்வாதிகளின் வெறும் கோசமாகவும், அரச தனியார் துறை வல்லுனர்களின் கனவாகவுமே காணப்படுகின்றது. கொழும்பு தலைநகரம் என்ற அடிப்படையில் ஒரளவு திட்டமிட்டப்பட்டு தற்போது அபிவிருத்தி செய்யப்படுவதற்கான முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும், ஏனைய நகரங்களில் ஒரு திட்டமிட்ட உட்கட்டுமான வசதிகள் நடைபெறுகின்றனவா என்பது கேள்விக்குறியே.

உட்கட்டுமான அபிவிருத்தியில் மிகப்பிரதானமான இடம் வகிப்பது மின்சார வசதிகள், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளாகும். இலங்கையை பொறுத்தளவில் தரை வழிப்போக்குவரத்தில் சிறந்த அபிவிருத்தியை கண்டுள்ளது. 95 வீதமான மக்கள் எந்நேரத்திலும் போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதான வீதியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கின்றனர். ஆகக்குறைந்தது 20 நிமிட நடையில் பிரதான பாதையையும் அப்பகுதியிலுள்ள பிரதான போக்குவரத்து வசதியையும் பெற்றுக்கொள்கின்றனர்.

தொலைத்தொடர்பு வசதியும் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்கள், மற்றும் இன்டர்நெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2011ல் 1 மில்லியனை விடவும் குறைந்த இன்டர்நெட் பாவனை, 2016ல் ஆறுமடங்கால் அதிகரித்து 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்டர்நெட் வசதிகளை பாவிக்கிறார்கள். எனினும் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் (Science, Technology, and Innocation) இலங்கை தொடர்ந்தும் பின்னிற்கிறது. உதாரணமாக உலக புத்தாக்க சுட்டெண்ணில் 100க்கு 30 புள்ளிகளை மாத்திரமே பெற்று 127 நாடுகளில் 90வது இடத்தில் உள்ளது. எவ்வளவு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டும், நவீன வினைத்திறனான புத்தாக்க சிந்தனையுடனான அபிவிருத்தியில் பின்னனியில் காணப்படுவது, எதிர்காலத்தில் மேலும் பல சவால்களை தொழில்சந்தையில் ஏற்படுத்தும்.

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பக்கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களிலும் நவீன தொழில்நுட்ப பாடங்கள் கற்பித்தலுடன் நின்றுவிடாது, ஆராய்ச்சி புத்தாக்க உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். அவற்றிற்கான நிதி வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

தொழில்ரீதியான பல அபிவிருத்திகளை இலங்கை கடந்த காலங்களில் கண்டாலும் அவை கட்டங்கள் மற்றும் உட்கட்டுமான தொழிலை மையமாக வைத்தே அமைந்தன. ஒட்டுமொத்த சிறந்த தொழில் ரீதியான பொருளாதார அபிவிருத்திற்கு, உற்பத்தி மைய அபிவிருத்தி (manufacturing and production) மிகப் பிரதானமாகும். உற்பத்தி மைய அபிவிருத்தி தொழில்துறை, ஆடை உற்பத்தி உணவு, மற்றும் ரப்பர் சார்ந்த உற்பத்தி தொழில்துறைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டன. மொத்த தொழில் துறைகளில், உற்பத்தி தொழில் (manufacturing sector), 18 வீதம் மாத்திரமே. அவை தொழிலாளர்களை அதிகமாக பயன்படுத்தும் தொழில்துறைகளே அன்றி தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக புதிய உற்பத்தி தொழில்சாலைகள், தொழில்துறைகள் இலங்கையில் வளர்ச்சியடையவில்லை. ஆசிய நாடுகளான தாய்வான், தாய்லாந்து, மலேசியா, கொரியா போன்ற நாடுகள்  மொத்த உள்நாட்டு வருமானத்தின் 30 வீதத்தினை தனது உற்பத்தி துறையிலிருந்து பெறும் அதேவேளை இலங்கை 15 வீதத்தையே கொண்டுள்ளது. தொழில்வாண்மை மற்றும் புத்தாக்க முயற்சிகளில் முதலீடும் நவீன முறைகள் பற்றிய அறிவும் நம்பிக்கையும் குறைவாக இருப்பது நவீன தொழில்மயமாக்கலுக்கும் உற்பத்தி துறையில் பின்தங்கியிருப்பதற்குமான மிக முக்கிய காரணங்களாகும். அரச நிறுவனங்களில் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களிலும், விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முதலீடு ஊக்குவிப்பு வாய்ப்புக்கள், பயிற்சிகள் போதுமானளவு வழங்கப்படாததும், தொடர்ந்தும் இலங்கை உற்பத்தி அபிவிருத்தி, மற்றும் ஏற்றுமதி துறைகளில் பின்னிற்கிறது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழல் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் சமூகங்களுக்கிடையpலான புரிந்துணர்வின்மை இன முரண்பாட்டிற்கான அரசியல் சமூக தீர்வுகளை முன்னுரிமைப்படுத்தாமையினால் அபிவிருத்தி மைய தொழில்மயமாக்கலில் மக்கள் ஆர்வkற்று காணப்படுகின்றனர். குறிப்பாக 2009ம் ஆண்டு போரிற்கு பின்னரான காலப்பகுதியில் மக்கள் போர் வடுக்களிலிருந்து மீண்டு வரும் போது, இன சமூக அரசியல் ரீதியான பிளவுகள் மீண்டும் இந்நிலையை மோசமாக்கியுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் ஸ்திரத்தன்மையுமில்லை, அதற்கான அரச இயந்திரங்களின் வினைத்திறனான கொள்கைகளையும் செயற்படுத்த முடியவில்லை.

தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதிக்குரிய விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வு மூலோபாயத்தை வகுத்திருந்தது. இவற்றை ஒருங்கிணைக்க COSTI என்ற (Coordinating office for Science, Technology, and Innovation) ஒரு செயலகத்தை அமைத்தது. எனினும் தொடர்ந்தும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு வருவதனால் தமது காலப்பகுதிக்கான கொள்கைகளில் மாற்றங்களும், முன்னுரிமைகளும் வேறுபடுவதனால் தொடர்ந்தும் திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த அரசினால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், பலவீனமாக்கப்பட்டு புதிய கட்டமைப்பு உருவாக்கப்படும் போது அது மீண்டும் தமது திட்டமிடலை மேற்கொண்டு செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்குள் மீண்டும் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, அனைத்து திட்டமிடல்களும் மீண்டும் கிடப்பில் போடப்படுகின்றன.

அரசியல் மாற்றங்களுக்கேற்றால் போல் அடிக்கடி மாறும் கொள்கைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சவாலாகும். இதனால் அரச இயந்திரம் துறைசார்நிபுணர்களாலும், தொழில் வல்லுணர்கள், புத்திஜீவிகளாலும் வழிநடத்தப்பட வேண்டுமே ஒழிய அரசியல் சார்ந்த குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அடுத்தடுத்த தேர்தல்களை இலக்கு வைத்த குறுகிய கால இலக்குகளை நிர்ணயிக்கும் போது நாட்டின் அபிவிருத்தி தொடர்ந்தும் கேள்விக்குறியே.