ஆக்கத்திறனுடைய வேலைவாய்ப்பே பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் -08

ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும்¸எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினை முன்னிறுத்துவதும் ஐக்கிய நாடுகள் சபையின் 2030 ஆண்டைய நிலைபேரான அபிவிருத்தியின் எட்டாவது இலக்காகும்.  இவ்விலக்கின் முக்கிய குறிகாட்டியாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வருடத்திற்கு குறைந்தது 7 விகிதமாக இருத்தல் வேண்டும்.

இவ்விலக்கினை அடைவதற்கான ஏனைய குறிகாட்டிகளில், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய தொழில் திட்டங்களை பொருத்தவரையில்,

  • தொழில் விரிவுபடுத்தல் (diversification), தொழில்நுட்பத்தின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள்¸ஆகியவற்றிற்கு அதிகளவு கவனம் செலுத்தப்படுவதன் மூலம் உயர் மட்டத்திலான பொருளாதார உற்பத்தித் திறனை அடைதல் சாத்தியமாகும்.
  • அபிவிருத்தி சம்பந்தமான கொள்கைகள், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதுடன் (production activities), அது தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதல் (decent job creation), தொழில்முனைவோர் (entrepreneurship)¸ ஆக்கத்திறன் மற்றும் கண்டுபிடிப்புகள் (creativity and innovations) தொடர்பிலும் ஒழுங்குபடுத்துதல் வேண்டும்.

சிறந்த வேலைவாய்ப்புக்களை பொருத்தவரையில்,

  • உற்பத்தித் திறன்மிக்க வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழில்களுடன் ஆண்/பெண், இளைஞர் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்களுக்கும் சம மதிப்புடனான வேலைக்கு சமமான கொடுப்பனவும் கிடைக்கப் பெறுதல் வேண்டும்.
  • இளைஞர் மத்தியில் வேலைவாய்ப்பு¸ கல்வி அல்லது பயிற்சி இன்மையை கணிசமானளவு விகிதாசார அடிப்படையில் குறைத்தல் வேண்டும்.

ஆனால், இலங்கையின் இளைஞர் சனத்தொகையில் 25 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில்வாய்ப்பு, கல்வி, மற்றும் திறன் விருத்தியை கொண்டிருக்கவில்லை. எமது நாட்டின் நிலை இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பை பொருத்தவரையில் மிகவும் மோசமடைந்து செல்கின்றது. கடந்த ஆறு வருடங்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 20 வீதமாக அதிகரித்துள்ளது. பட்டங்கள் முடித்தும் தனக்குரிய சரியான தொழிலை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை இளைஞர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

தொழிலாளர்களின் உரிமைகள் சிறந்த வேலைக்கான சூழல் என்பனவும் மிக முக்கியமாக கருதப்பட்டு, அவற்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதில் குறிப்பாக,

  • வலுக்கட்டாயமாக தொழிலில் அமர்த்தும் நிலைமையை ஒழிக்க உடனடி நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துதலை முடிவிற்கு கொண்டு வரவேண்டும்.
  • தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வேலை செய்யக்கூடிய பாதுகாப்பான சூழல் அனைத்து தொழிலாளர்களுக்கும் உருவாக்கப்படல் வேண்டும்
  • வெளிநாட்டில் வேலைசெய்யும் தொழிலாளர்கள்¸முக்கியமாக பெண் தொழிலாளர்கள் மற்றும் இவர்களுள் நிரந்தர தொழில் இல்லாதவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பும் மிக பெரிய அச்சுருத்தல் நிலையிலேயே காணப்படுகிறது. 2013ல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி ஊதியம் பெறும் 5 மில்லியன் தொழிலாளர்களில் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் தற்காலிக தொழிலாகவே செய்கிறார்கள். இவர்களுக்கு சரியான தொழில் உடன்படிக்கையோ தொழில் பாதுகாப்பு வழிமுறைகளோ வழங்கப்படவில்லை என அரச அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் ஆக்கத்திறனுடைய வேலைவாய்ப்பை உருவாக்க,

  • நுண்¸சிறிய மற்றும் நடுத்தர (micro, small and medium enterprises) நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • உள்நாட்டு நிதியியல் நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துவதன் மூலம் நிதியியல் சேவைகளை அனைவருக்கும் பெறக்கூடியதாக ஊக்கப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும்.

நுகர்வுக்கலாச்சாரத்தை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதும் உற்பத்தி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலமும் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை செய்ய முடியும். இவற்றில்,

  • வளங்களின் செயற்திறனான பயன்பாட்டினூடாக நுகர்விலும் மற்றும் உற்பத்தியிலும் (consumption and production) படிப்படியான பொருளாதார விருத்தியைக் ஏற்படுத்தலாம்.
  • நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தித் தொடர்பில் சுற்றாடல் சீரழிவை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட  வேண்டும்.
  • சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்தி அதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதுடன், நமது கலாச்சாரத்தையும் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடிகிறது.

இலங்கை சனத்தொகையின் அண்ணளவாக 10 வீதம் வெளிநாட்டில் வேலைசெய்பவர்கள் (1.8 மில்லியன்). இலங்கைப் பொருளாதாரத்தில் இவர்களின் பங்களிப்பு மிகப்பாரியதாகும;. 2018ம் ஆண்டில் வெளிநாட்டில் தொழில் செய்யும் இலங்கையர்களினால் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8 வீதமாகும்.

யுத்த காலத்தில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 வீதமாக மாத்திரம் இருந்த சுற்றுலாத்துறையின் பங்களிப்பு 2016ல் 6 வீதமாக அதிகரித்தது. சுற்றுலாத்துறை 150,000 நேரடி தொழில்வாய்ப்பையும் 200,000க்கும் அதிகமான தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது. எனினும் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட பல்வேறு அசாதாரண சூழ்நிலைகள் சுற்றுலாத்துறையை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது என்பது வெளிப்படை.. தொடர்ந்தும் இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்ல அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். ஈஸ்டர் தாக்குதலின் பின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தொடர்ந்தும் ஊக்குவிக்கப்பட்டுவரும் நிலையில், இலங்கையின் பொருளாதாரம், தொழில்துறை, சிறுபான்மை மக்களுக்கான சம வகிபாகம் குறிப்பாக முஸ்லிம் வர்த்தக சமூகம் மீதான தாக்குதல்களினால் மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. தனது உள் வர்த்தக பொருளாதார நிலையை சீரமைப்பதற்கான சந்தர்ப்பங்களுக்கு தொடர்ந்தும் தடையான செயற்பாடுகளை சிங்கள பௌத்த இனவாதிகள் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம் சமூகம் வெளி அழுத்தங்களிலிருந்து மீளெழுவதற்கு தனது வளங்களை குவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பும் உரிமைகளும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கும் இக்காலத்தில், அபிவிருத்தி பொருளாதார இலக்குகள் தொடர்பில் தனது கவனத்தை செலுத்துவதற்கான மனோநிலையை, உளவியல் ரீதியான தயார்நிலையை ஒரு சமூகத்திடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இச்சூழலிலேயே முஸ்லிம் சமூகம் தனது உள்ளக பொருளாதார சமூக கட்டமைப்பை மீள்பரிசீலனைக்குட்படுத்த வேண்டிய அவசியமும் உணரப்பட்டிருக்கின்றன. தேசிய ரீதியான பொருளாதார அபிவிருத்தி சட்டகத்தினுள் தனது தனித்துவ உரிமைகளை தேவையான இடங்களில் இணைத்து செயற்படுத்த வேண்டிய ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். நாட்டு நலனை முன்னிறுத்தி குறுகிய அரசியல், இன, மத இலாபங்களுக்கப்பால் சிந்திக்கக்கூடிய செயற்படக்கூடிய பொது தளங்களில் எமது தொழில்வல்லுணர்களும் சமூக செயற்பாட்டாளர்களும்    இணைந்து செயற்படுவதனால் குறுகிய காலத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை இனங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துகளை குறைக்க முடியும்.